பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்த அமலாக்கத்துறை 5 நாட்களாக விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்றுடன் காவல் முடிவடைகிறது. மேலும் விசாரிக்க அமலாக்கத் துறை அவகாசம் கேட்கும் என்று கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அமலாக்கத் துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் விசாரணைக் காவலில் எடுத்தது. இவ்வாறு விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செந்தில் பாலாஜி கார் மூலம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனுக்கு அழைத்துவரப்பட்டார்.
சாஸ்திரி பவனில் செந்தில் பாலாஜி
சாஸ்திரி பவனின் மூன்றாவது மாடியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். சோதனையின்போது செந்தில் பாலாஜி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கிடைத்த ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கேள்வி எழுப்பப்பட்டது. 300-க்கும் மேற்பட்ட கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டனர்.
செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தயார் நிலையில் அதிநவீன ஆம்புலன்சும் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்று மீண்டும் ஆஜர்
முன்னதாக அமலாக்கத்துறை கைது நடவடிக்கை செல்லாது என செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜியை 5 நாட்கள் விசாரணைக் காவலில் எடுத்து விசாரிக்க, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அமலாக்கத் துறை நாடியது. இந்த விசாரணைக்காக, செந்தில் பாலாஜி காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கும் நாட்களில், ஒரு நாளைக்கு இருமுறை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால், 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள நிலையில் இதுதொடர்பாக வேறு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிப்பதாகவும், 5 நாட்கள் காவல் முடிவடைந்ததும் செந்தில் பாலாஜியை 12-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
அடுத்தது என்ன?
இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வுநீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 12) ஆஜர் படுத்தப்பட உள்ளார். தொடர்ந்து விசாரிக்க வேண்டி இருப்பதால், மீண்டும் செந்தில் பாலாஜியை விசாரணைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. ஒருவேளை இதற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளிக்கும்பட்சத்தில், அதற்கு செந்தில் பாலாஜி மறுப்புத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளது.