டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் ஆடவர் ரிகர்வ் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் மற்றும் விவேக் சிகாரா ஆகிய இருவரும் பங்கேற்றுள்ளனர். விவேக் சிகாரா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். ஹர்விந்தர் சிங் மட்டும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னறியிருந்தார்.
காலிறுதிச் சுற்றில் ஹர்விந்தர் சிங் ஜெர்மனி வீரர் மெயிக் சாசெர்விஸ்கியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியை 6-2 என்ற கணக்கில் வென்று ஹர்விந்தர் அரையிறுதிக்கு தகுதி பெற்று இருந்தார். அரையிறுதிப் போட்டியில் ஹர்விந்தர் சிங் அமெரிக்கா வீரர் கேவின் மாதரை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் 6-4 என்ற செட் கணக்கில் கேவின் மாதர் வெற்றி பெற்றார். இதனால் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
இந்நிலையில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் தென்கொரிய வீரர் கிம் மின் சுவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் செட்டை இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் 26-24 என்ற கணக்கில் வென்று 2-0 என முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் சிறப்பாக வில்வித்தை செய்த தென்கொரிய வீரர் 29-27 என்ற கணக்கில் செட்டை வென்றார். இதனால் இரு வீரர்களும் 2-2 என சமமாக இருந்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிறப்பாக வில்வித்தை செய்து 28-25 என்ற கணக்கில் வென்று 4-2 என முன்னிலை பெற்றார்.
நான்காவது செட்டில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தென்கொரிய வீரர் கிம் தள்ளப்பட்டார். இந்தச் செட்டில் இரு வீரர்களும் தலா 25 புள்ளிகள் பெற்றனர். இதனால் இந்திய வீரர் 5-3 என முன்னிலை பெற்றார். ஐந்தாவது மற்றும் கடைசி செட்டில் 27-26 என்ற கணக்கில் கிம் வென்றார். இதன் காரணமாக இரு வீரர்களும் தலா 5-5 என இருந்தனர். வெண்கலப்பதக்கத்திற்கு ஷூட் ஆஃப் முறை நடத்தப்பட்டது. அதில் 10 புள்ளிகள் எடுத்து ஹர்விந்த சிங் போட்டியை வெற்றி பெற்றார். அத்துடன் வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
மேலும் பாராலிம்பிக் வில்வித்தை வரலாற்றில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்தவர் என்ற சாதனையையும் படைத்தார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இது இந்தியாவிற்கு 13ஆவது பதக்கமாகும். இந்தியா தற்போது வரை 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ‛மைதானத்தில் மீண்டும் ஜாவ்ரோ; போப்-பேர்ஸ்டோ ஜோடி நிதானம்! 2வது இன்னிங்ஸ் இம்சைகள்!