லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான் இன்று, ஆரம்பத்திலேயே உமேஷ் யாதவ் விக்கெட் எடுத்து இந்திய அணிக்கு நல்லதொரு தொடக்கத்தை தந்தார். மாலன் மற்றும் ஓவர்டன் ஆகியோரது விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்தின் ரன் வேட்டைக்கு முட்டுக்கட்டை போட்டிருந்தார்.
ஆனால், போப் மற்றும் பேர்ஸ்டோ பேட்டிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்துக்கு ரன் சேர்த்து வருகின்றனர். 62-5 என தடுமாறிக் கொண்டிருந்த இங்கிலாந்து அணிக்கு, இந்த பார்ட்னர்ஷிப்பில் ரன் சேர்ந்து வருகிறது. இரண்டாவது நாள் ஆட்டத்தின் தற்போதைய நிலவரப்படி, இதுவரை 12 பவுண்டரிகள் அடித்து இந்திய அணியின் பந்துவீச்சை ரன்களாக மாற்றி வருகிறனர். இந்நிலையில், இன்றைய போட்டியில் களத்தில் இருக்கும் பேர்ஸ்டோ, சர்வதேச கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்துள்ளார். 56 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருக்கும் இந்த கூட்டணி, இன்னும் ரன்கள் சேர்க்கும் முனைப்பில் விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவெளி நிலவரப்படி, இங்கிலாந்து 139/5 என்ற நிலையில் உள்ளது.
மீண்டும் ஜாவ்ரோ
இந்நிலையில், மூன்றாவது முறையாக இங்கிலாந்து மைதானத்திற்குள் ஜார்வோ(Jarvo) என்ற கிரிக்கெட் ரசிகர் புகுந்துள்ளது காமெடியையும் தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது இங்கிலாந்து கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை பற்றி கேள்வி எழுப்ப வைத்துள்ளது. இம்முறை மைதானத்திற்குள் புகுந்த ஜார்வோ, உமேஷ் யாதவுக்கு பதிலாக பெளலிங் வீசி ஆக்ஷன் செய்து கொண்டிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் நாள் அப்டேட்
நேற்று, டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 61.3 ஓவர்கள் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி, ஷர்துல் தாகூரின் அரை சதங்கள் அணியின் ஸ்கோரை 191 வரை கொண்டு செல்ல உதவியது. இரண்டாம் நாளான இன்று வந்தவுடன் ஓவர்டன் விக்கெட்டை வீழ்த்தினார் உமேஷ் யாதவ்.
இது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் உமேஷ் யாதவின் 150-வது விக்கெட். அவரைத் தொடர்ந்து, மாலன் விக்கெட்டையும் வீழ்த்தினார் உமேஷ். ஆனால், அதற்கு பிறகு இந்திய அணிக்கு விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் போப் - பேர்ஸ்டோ நிதானமாக விளையாடி வருகின்றனர்.