டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் ஆடவர் ரிகர்வ் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் மற்றும் விவேக் சிகாரா ஆகிய இருவரும் பங்கேற்றுள்ளனர். இன்று காலை நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் இருவரும் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தனர். இதில் ஹர்விந்தர் சிங் தன்னுடைய காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பாராலிம்பிக் அகதிகள் அணியைச் சேர்ந்த பட்டோவை எதிர்த்து விளையாடினார். அதில் முதல் இரண்டு செட்டை பட்டோ வென்றார். 


இதனால் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதனால் அடுத்த இரண்டு செட்களை வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஹர்விந்தர் தள்ளப்பட்டார். அதில் சிறப்பாக செயல்பட்ட ஹர்விந்தர் அடுத்த 2 செட்களையும் கைபற்றினார். இதைத் தொடர்ந்து இரு வீரர்களும் 4-4 என சமமாக இருந்தனர். இந்தச் சூழலில் கடைசி செட்டில் இருவரும் 28 புள்ளிகள் எடுத்தனர். இதன் காரணமாக கடைசி செட்டில் இருவருக்கும் ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. 5-5 என்ற இரு வீரர்களும் சமமாக இருந்ததால் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க ஷூட் ஆஃப் முறை நடத்தப்பட்டது. அதிலும் இரு வீரர்களுக்கும் தலா 7 புள்ளிகள் எடுத்தனர். எனினும் அதில் இந்திய வீரர் ஹர்விந்தர் நடுப்பகுதிக்கு அருகே அம்பை செலுத்தியதால் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனால் ஹர்விந்தர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 


 






அதேபோல் மற்றொரு இந்திய வீரரான விவேக் சிகாரா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரிட்டன் அணியின் பிலிப்ஸை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் செட்டை 27-25 என்ற கணக்கில் பிரிட்டன் வீரர் வென்றார். அதன்பின்னர் இரண்டாவது செட்டில் இரு வீரர்களும் தலா 25 புள்ளிகள் பெற்றனர். இதனால் 3-1 என்ற கணக்கில் பிலிப்ஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். மூன்றாவது செட்டில் சிறப்பாக செயல்பட்டு 28-22 என்ற கணக்கில் விவேக் வென்றார். அத்துடன் 3-3 என சமன் செய்தார். நான்காவது செட்டில் விவேக் சற்று தடுமாறினார். அதனால் அந்த செட்டை பிலிப்ஸ் 29-22 என்ற கணக்கில் வென்று 5-3 என மீண்டும் முன்னிலை பெற்றார். கடைசி செட்டை வென்றே ஆக வேண்டும் என்று இருந்த விவேக் முதல் அம்பை தவறவிட்டார். இதனால் அந்த செட்டையும் 23-17 என்ற கணக்கில் பிலிப்ஸ் வென்றார். அத்துடன் போட்டியை வென்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்து விவேக் வெளியேறினார். 


இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் காலிறுதிச் சுற்றில் ஹர்விந்தர் சிங் ஜெர்மனி வீரர் மெயிகை எதிர்த்து விளையாடுகிறார். அதில் வெற்றி பெரும் படசத்தில் அரையிறுதிக்கு முன்னேறுவார். 


மேலும் படிக்க:விவசாய குடும்பம்...! இளம் வயதில் பதக்கம்...! பாராலிம்பிக்கில் புதிய சாதனை படைத்த பிரவீன்குமார் யார்...?