டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் 7 பதக்கங்களை வென்று அசத்தினர். அதைத் தொடர்ந்து இன்று முதல் பாராலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் தொடங்குகின்றன. இன்று தொடங்கும் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இம்முறை இந்தியா சார்பில் 9 விளையாட்டுகளைச் சேர்ந்த 54 வீரர் வீராங்கனைகள் டோக்கியோ பாராலிம்லிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.


இந்நிலையில் இன்று டோக்கியோவில் வண்ணமையமான தொடக்க விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்த வீரர் அல்லது வீராங்கனை மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் தொடக்க விழாவில் அணி வகுத்து வந்தனர். இதில் இந்தியாவின் தேசிய கொடியை ஈட்டி எறிதல் வீரர் டெக் சந்த் ஏந்தி வந்தார். நாளையிலிருந்து போட்டிகள் தொடங்க உள்ளன.






முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் தேசிய கொடியை மாரியப்பன் தங்கவேலு  ஏந்தி செல்வதாக இருந்தது. எனினும் அவர் விமான பயணத்தின்போது மாரியப்பனுக்கு அருகில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், டோக்கியோ விரைந்த அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், இன்று மாலை நடைபெற இருக்கும் தொடக்க விழாவில் மாரியப்பன் இந்திய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை இழந்தார். மாரியப்பன் தங்கவேலு ரியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். 


பாராலிம்பிக் வரலாற்றில் இந்திய அணி இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தமாக 12 பதக்கங்களை வென்றுள்ளது. அதிகபட்சமாக ஒரே பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி 4 பதக்கங்களை இரண்டு முறை வென்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற 2016ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணி 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தது. இம்முறை முதல் முறையாக பாரா பேட்மிண்டன் மற்றும் வில்வித்தை ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இம்முறை இந்தியாவின் பதக்க வேட்டை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் நாளை டேபிள் டென்னிஸ் போட்டியில் இரண்டு வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர். 


மேலும் படிக்க: உடல் குறையல்ல மெடல் தான் இலக்கு... இந்திய பாராலிம்பிக் படை ரெடி!