ஒலிம்பிக்கில் குத்துச்சண்டைப்போட்டியில் தனது தோல்வியைக்கண்டு அழுத ரசிகையை நேரில் சந்தித்து தேற்றியுள்ளார் இந்திய வீராங்கனை மேரிகோம்.


சினிமா, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சாதனைப்படைக்கும் எத்தனையோ நபர்களுக்கு ரசிகர்கள் தான் பக்கப்பலம் என்று  கூற வேண்டும். படைப்பாளிகள் அவர்களது திறமையின் மூலம் வெளி உலகில் அறியப்பட்டாலும் ரசிகர்கள் தான் அதற்கு மூலக்காரணமாக இருக்க முடியும். தொடர்ந்து வெற்றியைத் தழுவிய ஒருவர் தோல்வியினைச் சந்தித்தால் அவர் மனமுடைகிறாரோ? இல்லையோ? ரசிகர்கள் அழுது புலம்பி விடுவார்கள். அப்படிப்பட்ட தீவிர ரசிகை ஒருவரைத்தான் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் சமீபத்தில் சந்தித்து தன்னுடைய அன்பினை பரிமாறிக்கொண்டார். அப்படி என்ன தான் நடந்தது? யார் அவர் என்பதைப்பற்றி நாமும் தெரிந்துக்கொள்வோம்.


 






டோக்கியாவில் கடந்த மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. அதில் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை மேரிகோம், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பியாவின் இன்கிரிட வலென்சியாவிடம் தோல்வியைச்சந்தித்தார். இப்போட்டிகளை பலரும் தொலைக்காட்சிகளில் ரசித்து வந்த நிலையில், ரசிகை ஒருவர் மேரிகோமின் தோல்வியைத் தாங்க முடியாததால் அழுது புலம்பினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியானதையடுத்து மேரிகோமும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோ பதிவிட்டதோடு, சகோதரி உங்களை சந்திக்க தான் விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் உங்களை கட்டி அணைத்து வாழ்த்துக்களைத் தெரிவிப்பேன் என்றும் குத்துச்சண்டை போன்ற எந்த விளையாட்டில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் நிச்சயம் உதவுவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.


 






தான் கூறிய வார்த்தை மாறாமல், தோல்வியைக்கண்டு ரசித்த ரசிகையை கண்டுபிடித்தார் மேரி கோம். அதோடு மட்டுமின்றி அவரை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்ததோடு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டிவிட்டரிலும் பகிர்ந்துக்கொண்டார். இதனையடுத்து மேரிகோமின் ரசிகர்களின் பலர் வாழ்த்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.