டோக்கியோ பாரலிம்பிக் தொடரின் முதல் நாளான இன்று, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் சோனல் பென், பவினாபென் ஆகியோர் போட்டியிட்டனர். போலியோவால் பாதிக்கப்பட்ட இந்த இரு வீராங்கனைகளும் இன்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் போராடி தோற்றனர். 


பாராலிம்பிக் போட்டிகளில், உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு பாதிப்புகளுடன் வீரர், வீராங்கனைகள் போட்டியிடுவர். அவர்களது, உடல் பாதிப்புகள் ஒருவரை ஒருவரிடம் இருந்து வித்தியாசப்பட்டிருக்கும். இதனால், ஒரு விளையாட்டில் வெறும் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் பிரிக்காமல், வெவ்வேறு பாதிப்புகளைப் பொருத்து பிரிவுகள் பிரிக்கப்படும். அந்த பிரிவுகளின்கீழ் வீரர் வீராங்கனைகள் போட்டியிடுவர். ஒரே விளையாட்டின் கீழ் பிரிக்கப்படும் பிரிவுகளை சில குறியீடுகளை கொண்டு அடையாளப்படுத்துவர். 






அந்த வகையில், சோனல் படேல் (C3) க்ரூப்பிலும் பவினா படேல் (C4) க்ரூப்பிலும் விளையாடினர். முதலில் தொடங்கிய போட்டியில், சோனல் பென் சீனாவின் லி குவினை எதிர்த்து போட்டியிட்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், சோனல் பென் கடைசி வரை போராடினார். 11-9, 3-11, 17-15, 7-11, 4-11 என சீன வீராங்கனைக்கு டஃப் கொடுத்தார் சோனல். ஆனால், போட்டி முடிவில் 2-3 என்ற செட் கணக்கில் போட்டியை இழந்தார். இந்நிலையில் நாளை அவர் மற்றொரு க்ரூப் சுற்று போட்டியில் விளையாட உள்ளார்.


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், பவினாபென் சீனாவின் சோ யிங்கை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியின் தொடக்கம் முதலே பின் தங்கிய நிலையில் இருந்தார் பவினா பென். போட்டி முடிவில் 3-11, 9-11, 2-11 என்ற புள்ளிக்கணக்கில் போட்டியை தோல்வியுற்றார்.






முன்னதாக, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் 7 பதக்கங்களை வென்று அசத்தினர். அதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நேற்று தொடங்கின. இந்த தொடர் செப்டம்பர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்முறை இந்தியா சார்பில் 9 விளையாட்டுகளைச் சேர்ந்த 54 வீரர் வீராங்கனைகள் டோக்கியோ பாராலிம்லிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.


பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தமாக 12 பதக்கங்களை வென்றுள்ளது. அதிகபட்சமாக ஒரே பாராலிம்பிக் தொடரில் இந்தியா 4 பதக்கங்களை இரண்டு முறை வென்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற 2016ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தது. இம்முறை முதல் முறையாக பாரா பேட்மிண்டன் மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது. ரியோ ஒலிம்பிக் தொடரைவிட மூன்று மடங்கு அதிக எண்ணிக்கையிலான வீரர் வீராங்கனைகளை இந்தியா டோக்கியாவுக்கு அனுப்பியுள்ளது. இதனால், பதக்க எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 8-12 பதக்கங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!