ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் நிறைவு பெற்றது. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி கடந்த மாதம் டோக்கியோவில் தொடங்கியது. இந்த போட்டி தொடங்கியதில் இருந்து இந்திய வீரர்கள் மிகவும் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். இதுவரை இந்த பாராலிம்பிக் தொடரில் இந்தியா 2 தங்கங்கள் உள்பட 10 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.


இந்த நிலையில், இன்று காலை கேனோஸ்பிரின்ட் எனப்படும் படகுப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் பிராச்சி யாதவ் என்ற வீராங்கனை பங்கேற்றார். கேனோஸ்பிரின்ட் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் முதல் வீராங்கனை பிராச்சி யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.






பிராச்சி யாதவ் மகளிருக்கான 200 மீட்டர் பிரிவில் பங்கேற்றார். அதில் அவர் போட்டி தூரத்தை 1 நிமிடம் 11.98 விநாடிகளில் கடந்து 4-வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் அவர் கேனோ ஸ்பிரின்ட் போட்டிக்கான அரையிறுதிக்கு முன்னேறினார்.


இந்த போட்டியில் முதல் இடத்தை இங்கிலாந்து நாட்டின் எம்மா விக்ஸ் என்ற வீராங்கனை பிடித்தார். அவர் 58.84 விநாடிகளில் போட்டி தூரத்தை கடந்தார். அவருக்கு அடுத்த இடத்தை ரஷ்யன் பாராலிம்பிக் கமிட்டி வீராங்கனையான மரியா நிகிபோர்வா பிடித்தார். மூன்றாவது இடத்தை கனடா நாட்டு வீராங்கனை பிரியானா ஹென்னெஸி கைப்பற்றினார்.




இதையடுத்து, கேனோஸ்பிரின்ட் போட்டிக்கான அரையிறுதிப் போட்டி நாளை காலை 6.14க்கு நடைபெற உள்ளது. கேனோஸ்பிரின்ட் போட்டியில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய பிராச்சி யாதவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


அதேபோல, இன்று மதியம் தொடங்கும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆகாஷ் மற்றும் ராகுல் சாஹர் பங்கேற்க உள்ளனர். 25 மீட்டர் கலப்பு பிரிவினருக்கான இறுதிப்போட்டியாக இது நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். மேலும், மாலை பதக்கங்களுக்கான போட்டியான ஆண்கள் குண்டு எறிதல் இறுதிப்போட்டி, மகளிருக்கான டோக்வோண்டோ போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.


மேலும் படிக்க : டோக்கியோ பாராலிம்பிக்: 10 மீட்டர் ரைஃபிள் கலப்பு துப்பாக்கிச் சுடுதல் : தகுதிச்சுற்றுடன் வெளியேறி இந்தியர்கள் ஏமாற்றம்..