டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக பேட்மிண்டன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தடகளத்திற்கு பிறகு இந்திய பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் முக்கியமான விளையாட்டு பேட்மிண்டன் தான். இதில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரர் பிரமோத் பகத், பாலக் கோலி,சுஹேஷ் யேத்திராஜ், மனோஜ் சர்கார் உள்ளிட்ட 7 இந்தியர்கள் பங்கேற்று உள்ளனர். இந்நிலையில்  மகளிருக்கான எஸ்யூ-5 பிரிவு ஒற்றையர் குரூப் போட்டியில் இந்தியாவின் பாலக் கோலி ஜப்பான் வீராங்கனை சுசுகி அயாகோவை எதிர்த்து விளையாடினார். 


பாரா பேமிண்டன் உலக தரவரிசையில் நம்பர் வீராங்கனையான சுசுகியை எதிர்த்து தரவரிசையில் 11ஆவது இடத்தில் உள்ள பாலக் கோலி விளையாடினார். இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே சுசுகி ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். முதல் கேமை 9 நிமிடத்தில் சுசுகி 21-4 என்ற கணக்கில் எளிதில் வென்றார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமிலும் சுசுகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 11 நிமிடங்களில் அந்த கேமை 21-7 என்ற கணக்கில் சுசுகி வென்றார். அத்துடன் 21-4,21-7 என்ற கணக்கில் மொத்தமாக 20 நிமிடங்களில் போட்டியை வென்றார். முதல் போட்டியில் தோல்வி அடைந்ததன்மூலம்  பாலக் கோலி அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும். 


 






முன்னதாக கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் மற்றும் பாலக் கோலி குரூப் பி-யில் இடம்பெற்றுள்ளனர். இந்த ஜோடி இன்று தனது முதல் குரூப் போட்டியில் பிரான்சு நாட்டைச் சேர்ந்த மசூர் லூகாஸ் மற்றும் நோயல் ஃபௌஸ்டெயின் ஆகியோரை எதிர்த்து விளையாடியது.  இதில் 21-9,15-21,21-19 என்ற கணக்கில் லூகாஸ்-நோயல் ஜோடி இந்தியாவின் பிரமோத் பகத் மற்றும் பாலக் கோலியை தோற்கடித்தனர். இந்திய ஜோடி அடுத்த குரூப் போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜோடியை எதிர்கொள்கிறது. அதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அடுத்ததாக ஆடவர் பாரா பேட்மிண்டன் எஸ்.எல்-3 பிரிவில் உலக தரவரிசையில் முதல் நிலை வீரரும் 5 முறை உலக சாம்பியனுமான பிரமோத் பகத் இன்று தன்னுடைய முதல் குரூப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.  முதல் குரூப் போட்டியில் இந்தியாவின் பிரமோத் பகத் மற்றும் மனோஜ் சார்கார் மோத உள்ளனர். இந்தப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. 


மேலும் படிக்க: மான்செஸ்டர் ஜெர்ஸியில் மீண்டும் ரொனால்டோ-வைரலாகும் படம் !