டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதலில் தற்போது வரை இந்திய அணி ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் வென்று அசத்தியுள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் அவானி லெகாரா தங்கப்பதக்கம் வென்றார். அதன்பின்னர் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் சிங்கராஜ் வெண்கலப் பதக்கத்தை வென்று இருந்தார். 


இந்நிலையில் இன்று 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு பிரிவு துப்பாக்கிச்சுடுதலின் தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் சித்தார்தா பாபு, அவானி லெகாரா, தீபக் ஆகிய மூவரும் பங்கேற்றனர். இந்தத் தகுதிச் சுற்று போட்டியில் மொத்தம் 47 பேர் பங்கேற்றனர். இவர்களில் 8 பேர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் கடும் போட்டி நிலவியது. மொத்தம் ஒரு வீரருக்கு 60 முறை துப்பாக்கிச்சுடும் வாய்ப்பு வழங்கப்படும். இவை அனைத்தும் 6 ரவுண்டாக ஒரு ரவுண்டிற்கு 10 ஷாட் என்று பிரிக்கப்பட்டது. 


அதன்படி இந்தியாவின் அவானி லெகாரா 105.9,105.0, 104.9,105.3,104.2,104.4 என்ற ஸ்கோர்களை பெற்று மொத்தமாக 629.7 புள்ளிகள் பெற்றார். அத்துடன் 27 ஆவது இடத்தை பிடித்தார். அதேபோல் மற்றொரு இந்திய வீரர் தீபக் குமார் 102.7,106.3,103.6,104.8,104.1,103.4  என மொத்தமாக 624.9 புள்ளிகளை பெற்றார். தகுதிச் சுற்றில் இவர் 43 ஆவது இடத்தை பிடித்தார். சித்தார்தா பாபு 104.9,103.4,102.9,105.2,105.3,103.8  என மொத்தமாக 625.5 புள்ளிகள் பெற்றார். அவர் 40 ஆவது இடத்தை பிடித்தார். 


 






மூன்று இந்தியர்களும் முதல் 8 இடங்களுக்குள் இடம்பிடிக்காத காரணத்தால் அவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். தகுதிச் சுற்றுடன் இந்த மூவரும் வெளியேறியுள்ளனர். முன்னதாக நேற்று ஒரே நாளில் இந்திய அணி ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் வென்று இருந்தது. அத்துடன் பாராலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக ஒரே பாராலிம்பிக் போட்டியில் இரட்டை இலகத்தில் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. இந்திய அணி தற்போது வரை 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் 10 பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக 2016 ரியோ பாராலிம்பிக் போட்டிகள் வரை இந்திய அணி மொத்தமாகவே 12 பதக்கங்களை மட்டுமே வென்று இருந்தது. தற்போது அதை இந்திய வீரர் வீராங்கனைகள் மாற்றி சாதனைப் படைத்து வருகின்றனர். 


மேலும் படிக்க:வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூபாய் 2 கோடி பரிசாக அறிவித்தது தமிழக அரசு