நாடு முழுவதும் ஆகஸ்ட் 29ஆம் தேதியான இன்று தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவான் மேஜர் தயான்சந்த் அவர்களின் பிறந்த தினம் தான் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விளையாட்டு தினத்தில் டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகளை பதக்க வேட்டையை நடத்தியுள்ளனர். 


அதன்படி முதலாக இன்று காலை நடைபெற்ற மகளிருக்கான கிளாஸ் 4 டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் சீன வீராங்கனை ஷியோ யிங்கை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பட்டேல் சற்று தடுமாறினார். உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையும் இரண்டு முறை பாராலிம்பிக் சாம்பியனும் மான ஷியோ யிங் இந்தப் போட்டியை 11-7,11-5,11-6 என்ற கணக்கில்  வென்றார்.இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம்  பவினா பட்டேல் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். அத்துடன் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். மேலும் தீபா மாலிக்கிற்கு பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வெல்லும் இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார். 


 






அதன்பின்பு இன்று மாலை நடைபெற்ற ஆடவருக்கான டி-47 உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் நிஷாத் குமார் மற்றும் ராம்பால் சாஹர் பங்கேற்றனர். அதில் தொடக்க முதலே சிறப்பாக உயரத்தை தாண்டு வந்த நிஷாத் குமார் அதிகபட்சமாக 2.06 மீட்டர் உயரத்தை தாண்டினார். அதற்கு அடுத்து 2.09 மீட்டர் தூரத்தை அவரால் தாண்ட முடியவில்லை. இதனால் 2.06 மீட்டர் உயரத்துடன் தன்னுடைய ஆசிய சாதனையை சமன் செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்தப் பிரிவில் வெள்ளிப்பதக்கத்தை அவர் அமெரிக்க வீரர் டாலஸ் உடன் சேர்ந்து பகிர்ந்து கொண்டார். 


கடைசியாக ஆடவருக்கான எஃப் -52 வட்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் வினோத் குமார் பங்கேற்றார்.  இதில் தன்னுடைய ஐந்தாவது முயற்சியில் அதிகபட்சமாக 19.91 மீட்டர் தூரம் வீசி புதிய ஆசிய சாதனை படைத்தார். இதன்மூலம் வட்டு எறிதலில் வினோத் குமார் 3ஆவது இடத்தை பிடித்தார். அத்துடன் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கதையும் வென்று அசத்தினார். இதன்மூலம் ஒரே நாளில் டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் 2 வெள்ளி மற்றும்  ஒரு வெண்கலம் வென்று இந்திய அணி சாதனையை படைத்துள்ளது. 


பாராலிம்பிக் போட்டிகளின் வரலாற்றில் இந்திய அணி அதிபட்சமாக ஒரே தொடரில் மொத்தமாகவே அதிகபட்சமாக  4 பதக்கங்களை வென்றுள்ளது. ஆனால் இம்முறை ஒரே நாளில் மூன்று பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. இதன்மூலம் இந்த முறை பாராலிம்பிக் வரலாற்றில் இந்திய அணி மொத்தமாக அதிக பதக்கங்களை வெல்வது உறுதியாகிவிட்டது. 


மேலும் படிக்க: துணை ராணுவப்படை டூ பாராலிம்பிக் பதக்கம்- வினோத் குமாரின் எழுச்சிப் பயணம் !