டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இன்று ஆடவருக்கான எஃப் -52 வட்டு எறிதல் போட்டி நடைபெற்றது. இந்தியா சார்பில் வினோத் குமார் பங்கேற்றார்.  இதில் தன்னுடைய ஐந்தாவது முயற்சியில் அதிகபட்சமாக 19.91 மீட்டர் தூரம் வீசி புதிய ஆசிய சாதனை படைத்தார். இதன்மூலம் வட்டு எறிதலில் வினோத் குமார் 3ஆவது இடத்தை பிடித்தார். அத்துடன் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கதையும் வென்று அசத்தினார். 


இந்நிலையில் வெண்கலப்பதக்கம் வென்ற வினோத் குமார் கடந்து வந்த பாதை என்ன?


ஹரியானா மாநிலம் ரோஹ்தக் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவர் இந்திய துணை ராணுவப்படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) பணிபுரிந்து வந்தார். இந்திய துணை ராணுவப்படையில் பணியாற்றி வந்த போது இவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இவருடைய கால்கள் இரண்டும் செயலிழக்கும் நிலை உருவானது. அத்துடன் இவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார். கிட்டதட்ட 10 ஆண்டுகள் இவர் மிகவும் சிரமப்பட்டுள்ளார். 




எல்லைப் பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வந்த இவரால் ஒரே இடத்தில் முடங்கி கிடக்க முடியவில்லை. அப்போது 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ பாராலிம்பிக் போட்டிகள் தொடர்பான செய்தியை இவர் கேட்டுள்ளார். இதைத்  தொடர்ந்து இவருக்கும் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. இதற்காக பயிற்சியை தொடங்க தீர்மானித்தார். அதில் வட்டு எறிதல் விளையாட்டை இவர் தேர்ந்தெடுத்தார். 


அதன்பின்னர் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய பாரா தடகள போட்டியில் இவர் வட்டு எறிதலில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் பங்கேற்றார். அதில் 4ஆவது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை சற்று தவறவிட்டார். 2020ஆம் ஆண்டு இவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 


இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் தன்னுடைய பயிற்சியை தொடங்கினார். 2021ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற ஃபாசா தடகள கிராண்ட் பிரிகிஸ் தொடரில் இவர் எஃப் -52 வட்டு எறிதலில் பங்கேற்றார். அதில் சிறப்பாக செயல்பட்ட வினோத் குமார் வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார். எனவே டோக்கியோ பாராலிம்பிக் போட்டியிலும் இவர் பதக்கம் வெல்லுவார் என்று அதிக நம்பிக்கை ஏற்பட்டது. 


அந்த நம்பிக்கையை உண்மையாக்கும் வகையில் புதிய ஆசிய சாதனைப் படைத்து எஃப் 52 வட்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு ஒரே நாளில் இது மூன்றாவது பதக்கமாகும். தேசிய விளையாட்டு தினம் அன்று மூன்று பேர் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இதன் காரணமாக இந்திய விளையாட்டு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தில் உள்ளனர். 


மேலும் படிக்க: கொரோனா பாதிப்பு டூ ஒலிம்பிக் பதக்கம்- வெள்ளி வென்ற நிஷாத் குமாரின் சாதனைப் பயணம்