டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் வீசி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். தன்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள 23 வயதான இவர் இந்தியாவிற்கு தடகளத்தில் முதல் தங்கத்தை வென்று அசத்தியுள்ளார். இந்தச் சூழலில் யார் இந்த நீரஜ் சோப்ரா? எப்படி இந்த அளவிற்கு உயர்ந்தார்.

  



 


ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா தன்னுடைய 11ஆவது வயதில் 90 கிலோ உடல் எடையுடன் உடல் பருமனாக இருந்துள்ளார். அப்போது இவரை உடல் எடையை குறைக்க இவருடைய குடும்பத்தினர் தினமும் ஜிம் செல்ல வலியுறுத்தியுள்ளனர். அதை சரியாக செல்லாமல் அவர் காலையில் ஓட தொடங்கியுள்ளார். அப்போது இவர்  ஈட்டி எறிதல் வீரர் ஜெய் சௌதரியை சந்தித்துள்ளார். அப்போது அவர் தன்னுடைய ஈட்டியை கொடுத்து நீரஜ் சோப்ராவை வீச சொல்லியுள்ளார். அந்த சமயத்தில் நீரஜ் சோப்ரா வீசிய ஈட்டி 35-40 மீட்டர் தூரம் சென்றுள்ளது. அதை பாராட்டிய சௌதரி நீரஜ் சோப்ராவை ஈட்டி எறிதலில் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் உடல் எடை அதிகமாக இருந்தாலும் அவருடைய உடம் நல்ல வலையும் தன்மை கொண்டி இருப்பது அவருக்கு கூடுதல் பலம் எனக் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் பயிற்சியை தொடங்கியுள்ளார். 


தன்னுடைய ஈட்டி எறிதல் பயிற்சிக்கு பல தடைகளை உடைத்து உழைத்தார். அவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால் கிடைத்த சில ஸ்பான்சிர்ஷிப்களை வைத்து தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தார்.  2016-ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று குவிக்க தொடங்கினார். 2016-ம் ஆண்டு 20 வயதிற்குட்பட்டோருக்கான சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் ரெக்கார்டு படைத்தார். அதனை தொடர்ந்து, 2018-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய போட்டிகளில் தங்கம் வென்று அசத்தினார். 


2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இவர் இழந்ததால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் எப்படியாவது தகுதிப் பெற வேண்டும் என்று தீவிரமாக உழைத்தார். 2020ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு சர்வதேச தடகள போட்டியில் 87.86 மீட்டர் தூரம் வீசி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றார். அதன்பின்னர் ஒலிம்பிக் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட போது இவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாமல் சற்று வருத்தத்தில் இருந்தார். எனினும் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் தடகளத்தில் 88.07 மீட்டர் தூரம் வீசி தன்னுடைய தேசிய சாதனையை உடைத்து புதிய தேசிய சாதனைப் படைத்தார். 


இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்ப்பார்ப்பை அவர் இன்று பூர்த்தி செய்துள்ளார். 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றார். அவருக்கு பிறகு தனி நபராக இந்தியாவிற்கு இரண்டாவது தங்கத்தை வென்று புதிய வரலாற்றை நீரஜ் சோப்ரா எழுதியுள்ளார். 


90 லட்சம் பார்வை...ட்ரெண்டிங்கில் நம்பர் ஓன் - ‛நாங்க வேற மாறி ’ என மீண்டும் நிரூபித்த வலிமை!