கொரோனா பேரிடருக்கு நடுவே நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் பல வரலாறுகளுக்கு முதல்களமாக இருந்துவருகிறது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் விளையாடியது, இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிப்போட்டியில் விளையாடவிருக்கிறது, நீச்சலில் தங்கம் வென்ற இங்கிலாந்து நீச்சல் வீரர் டாம் ஹேட்லி தன்னை தன்பால் ஈர்ப்பாளராகத் தான் இந்தப் பதக்கத்தை வென்றது பெருமை எனக் கூறியுள்ளார். அமெரிக்க ஜிம்னாஸ்ட் சிமோன் பைல்ஸ் உளவியல் ஆரோக்கியம் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். 


இந்த வரலாறுகளின் வரிசையில், தன்னை திருநராக வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட நியூசிலாந்து நாட்டு போட்டியாளர் லாரல் ஹப்பார்ட் ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டிகளில் பங்கெடுத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் முதன்முறையாக தன் பிறப்பால் அமைந்த பாலினம் அல்லாத திருநர்கள் பங்கேற்பதற்கான ஆவண செய்துள்ளது. இதற்கிடையேதான் பளுதூக்கும் போட்டிகளில் ஹப்பார்ட் பங்கேற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் திருநர் ஒருவர் பங்கேற்று விளையாடுவது இதுவே முதல்முறை.  ஆனால் அவர் பங்கேற்றது வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. குறிப்பிட்ட எடையைத் தூக்க முடியாமல் அவர் போட்டியிலிருந்து வெளியேறினார். 15 வருட இடைவெளிக்குப் பிறகு அவர் பங்கேற்கும் முதல் சர்வதேசப் போட்டி இது. 








+84 கிலோ எடைபிரிவினருக்கான பளுதூக்கும் போட்டிகளில் அவர் பங்கேற்றார். 120 கிலோ மற்றும் 125 கிலோ பளுவைத் தூக்கும் முயற்சியில் அவர் தோல்வி அடைந்ததை அடுத்து பத்து நிமிடங்களில் போட்டியில் இருந்து வெளியேறினார். இந்தப் பிரிவில் சீனாவின் லீ வென்வென் தங்கப்பதக்கம் வென்றார் மற்றும் இங்கிலாந்தின் எமிலி கேம்பெல் வெள்ளிப்பதக்கம் வென்றார். சீனாவின் லீ 320 கிலோ பளுவைத் தூக்கி சாதனை படைத்தார். 


ஹப்பார்ட் இந்தப் போட்டியில் பங்கேற்றது வலுத்த சர்ச்சையை ஏற்படுத்தியது, ‘திருநர் ஹப்பார்ட் பங்கேற்பது பெண் போட்டியாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி’ என சர்ச்சைக் கருத்து பரவியது. போட்டியில் இருந்து வெளியேறிய ஹப்பார்ட் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அதில், ‘விளையாட்டுப் போட்டிகளின் அடிப்படையில் எனக்கென வரையறுத்துக்கொண்ட தகுதிகளை நான் இன்னும் எட்டவில்லை. ஆனால் நியூசிலாந்து மக்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்தக் கடினமான காலத்தில் எனக்கு ஊக்கமளித்து ஆதரவளித்த நியூசிலாந்து ஒலிம்பிக் கமிட்டிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.நான் இந்தப் போட்டியில் பங்கேற்றது சர்ச்சையை உருவாக்கியுள்ளது என்பதை நான் அறிவேன். ஆனால் ஒட்டுமொத்தமாக நான் நானாக இந்தப் போட்டியில் பங்கேற்றது அருமையாக இருந்தது. அதற்காக நான் பெருமை கொள்கிறேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.