இந்தியாவில் மிகவும் பரிச்சயப்படாத விளையாட்டுகளில் ஒன்று ஃபென்சிங். அதாவது வாள்வீச்சு விளையாட்டு. இந்த விளையாட்டில் மூன்று வகைகள் உள்ளன. அவற்றில் சேபர் ஃபென்சிங் ரக வாள்வீச்சு போட்டியில் களம் கண்டு வருபவர் சி.ஏ.பவானி தேவி. சேபர் பிரிவு ஃபென்சிங் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை பவானி தேவி படைத்தார். அதில் முதல் சுற்றில் வெற்றிபெற்றும் அசத்தினார். இந்நிலையில் யார் இந்த பவானி தேவி. அவர் எப்படி ஃபென்சிங் விளையாட்டிற்குள் வந்தார் என தெரிந்துகொள்ளுங்கள்..!
சேபர் பிரிவு ஃபென்சிங்:
சேபர் ஃபென்சிங் பிரிவில் எதிராளியின் மேல் உடம்பு பகுதியில் தொட்டால் மட்டுமே புள்ளிகள் வழங்கப்படும். அதுவும் கைகளில் தொட்டால் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது. இதனால் சேபர் ஃபென்சிங் புள்ளிகளை பெற வேண்டும் என்றால் ஒருவர் மிகவும் வேகமாகவும் துடிப்புடனும் இருக்கவேண்டும். பவானி தேவி தன்னுடைய பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பயின்றார். தனது பள்ளி பருவத்தில் வகுப்புகளை புறக்கணிப்பதற்காக ஏதாவது விளையாட்டை தேர்வு செய்ய பவானி தேவி முடிவு செய்துள்ளார். அந்த சமயத்தில் அவரது பள்ளியில் அனைத்து விளையாட்டுகளுக்கும் தேவையான நபர் சேர்ந்துவிட்டதாக கூறியுள்ளார்.
கடைசியாக ஃபென்சிங் (வாள்வீச்சு) விளையாட்டிற்கு மட்டும் ஆள் தேவைப்படுகிறது என்று கேட்டுள்ளனர். அப்போது விளையாட்டுத்தனமாக பவானி தேர்வு செய்த விளையாட்டு நாளடைவில் அவரது அடையாளமாக ஆகும் என்று அவர் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார். தனது 14 வயது முதல் பவானி தேவி சர்வதேச ஃபென்சிங் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அப்போது முதல் சர்வதேச ஃபென்சிங் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிதியுதவி:
ஃபென்சிங் விளையாட்டு உடை வாங்குவது மற்றும் அதற்கான பயிற்சியை எடுப்பதற்கு அதிகளவில் பணம் செல்வாகும். இதனால் அது அவருடைய பயிற்சிக்கு பெரிய தடையாக இருந்தது. இந்த சமயத்தில் 2008-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, பவானி தேவி சந்தித்தார். அந்த சமயத்தில் அவர் ஆட்சிப்பொறுப்பில் இல்லை. எனினும் பவானி தேவி சீனியர் பிரிவு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு கொரியா செல்ல பணம் இல்லை என்பதை முன்வைத்தார். அதற்கு ஜெயலலிதா காசோலை ஒன்று வழங்கி உதவினார்.
அதன்பின்னர் 2009-ஆம் ஆண்டு ஜூனியர் காமென்வெல்த் போட்டியில் சேபர் பிரிவு ஃபென்சிங் போட்டியில் பவானி தேவி வெண்கலப்பதக்கம் வென்றார். அதுதான் அவர் வென்ற முதல் சர்வதேச பதக்கம். அதன்பின்னர் 2104, 2015-ஆம் ஆண்டில் 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மீண்டும் 2015-ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் நடைபெற்ற பிளமேஷ் ஓபன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதைத் தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு மீண்டும் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தமிழ்நாட்டு ஒலிம்பிக் வீரர்கள் திட்டத்தை தன்னை இணைத்து கொள்ளுமாறு கேட்டார். அதற்கு உடனடியாக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்து உதவினார். அதன்பின்னர் இவருக்கு கோ ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனமும் நிதியுதவி வழங்க தொடங்கியது. இதனால் எந்தவித நிதிச்சுமையும் இல்லாமல் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க தொடங்கினார்.
முதல் தங்கம்:
இவரின் வீடா முயற்சி மற்றும் சரியான பயிற்சியால் 9 ஆண்டுகளுக்கு பிறகு 2017-ஆம் ஆண்டில் சர்வதேச அரங்கில் தனது முதல் தங்கப்பதக்கத்தை தட்டினார். 2017-ஆம் ஆண்டு ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக சாட்டிலையிட் ஃபென்சிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் ஃபென்சிங் போட்டியில் தங்கம்வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை பவானி தேவி படைத்தார். அத்துடன் ஃபென்சிங் விளையாட்டில் சர்வதேச அளவில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்வது அதுவே முதல் முறையாகும். இதனைத் தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சீனியர் காமென்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப்பில் பவானி தேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அதேபோல 2019-ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் நடைபெற்ற சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்:
தன்னுடைய சர்வதேச தரவரிசை மூலம் பவானி தேவி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றார். அப்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பெரிய அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். அதில் உங்கள் கனவுகளை துரத்துங்கள் அது நிச்சயம் ஒரு நாள் நினைவாகும் என்று கூறியிருந்தார்.
அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று முதல் சுற்றில் தன்னைவிட தரவரிசையில், முன்னால் உள்ள வீராங்கனையை வீழ்த்தி அசத்தினார். அத்துடன் இரண்டாவது சுற்றில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையை எதிர்த்து நன்றாக போராடினார். அவர் தோல்வி அடைந்திருந்தாலும் நம்மை பெருமைப்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: ஃபென்சிங் போட்டியில், உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையிடம் போராடி பவானி தேவி தோல்வி