டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் தீபிகா குமரி, அடானு தாஸ், தருண்தீப் ராய்,பிரவீன் ஜாத்வ் ஆகியோர் பங்கேற்று உள்ளனர். கடந்த 23ஆம் தேதி வில்வித்தை போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் தீபிகா குமாரி மகளிர் பிரிவில் 9ஆவது இடத்தையும், ஆடவர் குழு பிரிவில் இந்திய அணி 9ஆவது இடத்தையும் பிடித்தது. கலப்பு பிரிவிலும் இந்திய அணி 9ஆவது இடத்தை பிடித்தது.
இந்நிலையில் ஆடவர் குழுப் போட்டி இன்று தொடங்கியது. அதில் இந்தியா சார்பில் அடானு தாஸ், தருண்தீப் ராய் மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகியோர் பங்கேற்றனர். இதில் முதல் இரண்டு செட்களையும் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி கைப்பற்றினர். அதன்பின்னர் நடைபெற்ற மூன்றாவது செட்டை கஜகிஸ்தான் அணி கைப்பற்றியது. இதனால் 4-2 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது. கடைசி செட்டில் சிறப்பாக வில்வித்தை செய்த இந்திய அணி அதை கைப்பற்றியது. இதனால் 6-2 என்ற கணக்கில் இந்திய வில்வித்தை வீரர்கள் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு நுழைந்துள்ளனர். பின்னர் நடைபெறும் இரண்டாவது சுற்றில் இந்திய அணி பலம் வாய்ந்த தென் கொரியா அணியை எதித்து விளையாட உள்ளது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 10.15 மணிக்கு நடைபெற உள்ளது.
முன்னதாக கலப்பு பிரிவு வில்வித்தையில் இந்தியா சார்பில் தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகியோர் பங்கேற்றனர். அதில் அவர்கள் முதல் சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்கள். காலிறுதிச் சுற்றில் பலம் வாய்ந்த தென்கொரிய அணிக்கு எதிராக இந்திய இணை 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதன்மூலம் பதக்கம் வெல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது. இந்தச் சூழலில் இன்று ஆடவர் குழுப் போட்டி தொடங்கியுள்ளது. அடுத்து மகளிர் தனி நபர் பிரிவு போட்டிகள் வரும் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. அதில் இந்தியா சார்பில் தீபிகா குமாரி பங்கேற்க உள்ளார். முதல் போட்டியில் அவர் பூடான் நாட்டைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனையை எதிர் கொள்ள உள்ளார்.
மேலும் படிக்க: வரலாறு படைக்கப்பட்டது.... ஒலிம்பிக் ஃபென்சிங் போட்டியில், வெற்றியுடன் தொடங்கினார் பவானி தேவி !