டோக்கியோ ஒலிம்பிக் ஃபென்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் முதல் வீராங்கனை தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி. இன்று அவருடைய சேபர் பிரிவு ஃபென்சிங் போட்டிகள் தொடங்கின. அதில் முதல் சுற்றில் இவர் நாடியாவை எதிர்த்து சண்டை செய்தார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் இந்தியா சார்பில் முதல் முறையாக ஒரு வீராங்கனையாக ஒலிம்பிக் ஃபென்சிங் போட்டியில் பங்கேற்று வரலாற்று சாதனைப் படைத்தார்.
இந்நிலையில் சேபர் பிரிவு ஃபென்சிங் போட்டியின் இரண்டாவது சுற்றில் ஃபிரான்சு நாட்டின் ப்ரூனட் மானனை எதிர்கொண்டார். அதில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான ப்ரூனட் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தார். குறிப்பாக பவானி தேவியின் உடம்பின் மேல் பகுதியில் லாவகமாக தொட்டு கொண்டு புள்ளிகளை சேர்த்த வண்ணம் இருந்தார். இதனால் 5-1 என முன்னிலை பெற்றார்.
அதன்பின்னர் சற்று சுதாரித்து கொண்ட பவானி தேவி இரண்டாவது புள்ளியை எடுத்தார். இருப்பினும் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனை தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். அதன்பின்னர் சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடங்கிய போது அதிலும் ஃபிரான்சு வீராங்கனை மேலும் 3 புள்ளிகளை வேகமாக எடுத்தார். அதற்கு பவானி தேவியும் சரியாக ஈடு கொடுத்தார். அவரும் வேகமாக 4 புள்ளிகளை எடுத்தார். இதனால் ஸ்கோர் 11-6 என இருந்தது. இறுதியில் பரூனட் மானனான் 15-7 என்ற கணக்கில் இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றார். இதன்மூலம் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து பவானி தேவி ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து வெளியேறினார்.
சேபர் பிரிவு ஃபென்சிங்கை பொறுத்தவரை எதிராளியின் உடம்பின் மேல் பகுதியில் தொட்டால் மட்டுமே புள்ளிகள் வழங்கப்படும். எனவே இருவரும் அவர்களின் மேல் பகுதியை பாதுகாத்து கொண்டு விளையாட வேண்டும். ஏற்கெனவே இந்தியா சார்பில் முதல் முறையாக ஃபென்சிங் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை பவானி தேவி படைத்திருந்தார். அதன்பின்னர் தற்போது ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார். மேலும் ஒலிம்பிக் ஃபென்சிங் போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெற்றும் வரலாறு படைத்துள்ளார். சாதனையுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து பவானி தேவி வெளியேறியுள்ளார்.
மேலும் படிக்க: டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவை அபார வெற்றியுடன் தொடங்கிய தமிழ்நாட்டின் சரத் கமல் !