டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதல் நாளில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல்-மானிகா பட்ரா இணை சீன தைபேவின் மூன்றாம் நிலை ஜோடியான லின்-செங் ஜோடியிடம் 4-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதன்பின்னர் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மானிகா பட்ரா மற்றும் சுதிர்தா முகர்ஜி ஆகியோர் தங்களுடைய முதல் சுற்றில் வெற்றிப் பெற்றனர். நேற்று நடைபெற்ற போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மானிகா பட்ரா வெற்றி பெற்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன் ஹாங்காங் வீரரிடம் போராடி தோல்வி அடைந்தார்.  


இந்நிலையில் இந்தியாவின் சரத் கமலுக்கு ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் பை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அவருடைய இரண்டாவது சுற்று போட்டி நடைபெற்றது. இதில் போர்ச்சுகல் நாட்டின் அபோலோனியா டியாகோவை எதிர்த்து விளையாடினார். அதில் முதல் கேமை டியாகோ 4 நிமிடங்களில் 11-2 என்ற கணக்கில் வென்றார். இரண்டாவது கேமில் சரத் கமல் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதில் 11-8 என்ற கணக்கில் வென்றார். அதேபோல் மூன்றாவது கேமை 7 நிமிடங்களில் 11-5 என்ற கணக்கில் வென்று அசத்தினார். 


அதன்பின்னர் நடைபெற்ற நான்காவது கேமில்  இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை எடுத்து வந்தனர். இறுதியில் போர்ச்சுகல் வீரர் டியாகோ 11-9 என வென்றார். இதனால் இருவரும் தலா 2 கேம்களை வெற்றி பெற்று சம நிலையில் இருந்தனர். ஐந்தாவது கேமிலும் இருவரும் சளைக்காமல் மாறி மாறி அசத்தலாக விளையாடி வந்தனர். இறுதியில் 5ஆவது கேமை சரத் கமல் 11-6 என்ற கணக்கில் வென்றார். இதனால் 3-2 என முன்னிலை பெற்றார். அதன்பின்னர் நடைபெற்ற 6ஆவது கேமில் 11-9 என்ற கணக்கில் வென்று இரண்டாவது சுற்றில் வெற்றி  பெற்றார்.  தன்னுடைய நான்காவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று  உள்ள சரத் கமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். 


 






இன்று காலை 8.30 மணிக்கு மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி பங்கேற்க உள்ளார். இவர் போர்ச்சுகல் நாட்டின் யூ ஃபூவை எதிர்த்து விளையாட உள்ளார். அதேபோல் மதியம் 1 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியாவின் மானிகா பட்ரா மகளிர் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்றில் சோஃபியா போல்கானோவை எதிர்த்து விளையாட உள்ளார். இவர்கள் இருவரும் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவிற்கு டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஒரு சிறப்பான நாளாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க: டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை ஆடவர் குழுப் போட்டி : முதல் சுற்றில் இந்தியா வெற்றி !