டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் தீபிகா குமரி, அடானு தாஸ், தருண்தீப் ராய்,பிரவீன் ஜாத்வ் ஆகியோர் பங்கேற்று உள்ளனர். இதில் கலப்பு பிரிவு வில்வித்தையில் இந்தியா சார்பில் தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள்  காலிறுதிச் சுற்றில் பலம் வாய்ந்த தென்கொரிய அணிக்கு எதிராக இந்திய இணை 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளித்தனர். அதேபோல் ஆடவர் குழு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தருண்தீப் ராய், அடானு தாஸ், பிரவீன் ஜாதவ் ஆகியோரும் காலிறுதிச் சுற்றில் தென்கொரியா அணியிடம் 6-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது. 


இந்நிலையில் தனிநபர் பிரிவு வில்வித்தை போட்டிகளில் இன்று தருண்தீப் ராய் முதல் சுற்றில் உக்ரைன் நாட்டின் ஹன்பின் ஓலெஸ்கியை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டில் இந்தியாவின் தருண்தீப் ராய் மற்றும் ஹன்பின் ஆகிய இருவரும் 25 புள்ளிகள் பெற்று சமமாக இருந்தனர். இதனால் இருவருக்கும் ஒரு செட் புள்ளி வழங்கப்பட்டது. இரண்டாவது செட்டில் தருண்தீப் 27 புள்ளிகளும் ஹன்பின் 28 புள்ளிகளும் பெற்றனர். இதனால் ஹன்பின் 3-1 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றார். 


இதைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டில் இருவரும் 27 புள்ளிகள் எடுத்து மீண்டும் இருவரும் சமமாக இருந்தனர். இதனால் இருவருக்கும் மீண்டும் ஒரு செட் புள்ளி வழங்கப்பட்டது. 4-2 என்ற கணக்கில் ஹன்பின் முன்னிலையில் இருந்தார். நான்காவது செட்டை தருண்தீப் ராய் 26-24 என்ற கணக்கில் வென்றார். இதனால் இருவரும் 4-4 என்ற செட் புள்ளிகள் பெற்று சமமாக இருந்தனர். போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டில் தருண்தீப் ராய் சிறப்பாக செயல்பட்டு 28-25 என புள்ளிகள் எடுத்து வென்றார். தருண்தீப் ராய் 6-4 என்ற கணக்கில் தருண்தீப் ராய் வெற்றிப் பெற்றார். அடுத்த சுற்றில் இவர் இஸ்ரேலின் இடேவை எதிர்த்து விளையாட உள்ளார். இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 8.15 மணிக்கு நடைபெற உள்ளது. 

இந்தியா சார்பில் ஆடவர் தனிநபர் பிரிவு போட்டியில் இன்று பிரவீன் ஜாதவ் ரெஸ்ட் ஆஃப் ஒலிம்பிக் அணியைச் சேர்ந்த கால்சனை எதிர்கொள்ள உள்ளார். இந்தப் போட்டி மதியம் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது.  அதேபோல் மகளிர் தனிநபர் பிரிவு போட்டியில் தீபிகா குமாரி முதல் சுற்றில் பூடான் நாட்டைச் சேர்ந்த கர்மாவை எதிர் கொள்ள உள்ளார். இந்தப் போட்டி மதியம் 2.15 மணிக்கு நடைபெற உள்ளது.  


 


மேலும் படிக்க: பதக்க பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம்? அமெரிக்கா, ஜப்பான், சீனா இடையே கடும் போட்டி