ஒலிம்பிக் தொடங்கிய முதல் நாளன்று, இந்தியாவைப் பொருத்தவரை கொண்டாட்டமும், வருத்தமும் கலந்ததாக இருந்தது. பளுதூக்குதல் போட்டியில் மீரா பாய் சானுவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது நம்பிக்கையை கொடுத்தது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளவேனில் வாலறிவன், சவுரப் சவுத்ரி, தீபிகா குமாரி உள்ளிட்டவர்கள் ஏமாற்றம் அளித்தனர்.
அதனை தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்ற போட்டிகளிலும் இந்தியாவைச் சேர்ந்த முக்கிய வீரர் வீராங்கனைகள் ஏமாற்றத்தை அளித்தனர். எனினும், மானிகா பத்ரா, சாத்விக்-சிராக், சுதிர்தா முகர்ஜி, பவானி தேவி, சுமித் நகல் உள்ளிட்ட இளம் வீரர் வீராங்கனைகள் முதல் சுற்றை கடந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று நம்பிக்கை அளித்தனர். வெவ்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியபோதும், கடுமையான போட்டி நிலவியதால் இந்திய வீரர் வீராங்கனைகள் ஏமாற்றம் அளித்தனர்.
இந்நிலையில்,இன்றைய போட்டி முடிவுகளின் நிலவரப்படி, ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் 39-வது இடத்தில் உள்ளது. 9 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலப்பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்திலும், 9 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 9 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாவது இடத்திலும் பதக்க பட்டியலில் நிலை பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற போட்டிகளைப் பெருத்தவரை,டோக்கியோ ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு துப்பாக்கிச் சுடுதலில் மனுபாக்கர்-சவுரப் சௌதரி மற்றும் யாஷஸ்வினி தேஸ்வால்-அபிஷேக் வெர்மா ஆகியோர் பங்கேற்றனர். இந்த போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய மனு பாக்கர்-சவுரப் சௌதரி இணை, 380 புள்ளிகள் பெற்று 7ஆவது இடத்தை பிடித்தனர். இதனால் வெண்கலப்பதக்கம் மற்றும் தங்கப்பதக்கம் போட்டிகளுக்கு இவர்கள் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தனர்.
மற்றொரு இந்திய இணையான யாஷஸ்வினி தேஸ்வால்-அபிஷேக் வெர்மா 564 புள்ளிகள் பெற்று17 இடத்தைப் பிடித்தது. மனு பாக்கர்-சவுரப் சௌதரி இணை இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. முதல் 8 இடங்களுக்குள் வராததால் அபிஷேக் வெர்மா-யாஷஸ்வினி தேஸ்வால் இணை வெளியேறியது.
ஆடவர் ஹாக்கி போட்டிகளில் குரூப் ஏ பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா 3-2 என வீழ்த்தியது. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் 7-1 என தோல்வி அடைந்தது. இந்நிலையில் இன்று தனது மூன்றாவது குரூப் போட்டியில் இந்திய அணி ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில், 3-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை தோற்கடித்து வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது இந்திய அணி.
டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் சரத் கமல் தோல்வி அடைந்துள்ளார்.
சத்விக்-சிராக் இணை பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த வென்டி-லென் இணையை எதிர் கொண்டது. இந்தப் போட்டியில் முதல் கேமை இந்தியாவின் சத்விக் சாய்ராஜ்-சிராக் செட்டி இணை 21-17 என்ற கணக்கில் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமில் பிரிட்டன் வீரர்கள் சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் இந்திய வீரர்கள் அவர்களை சிறப்பாக சமாளித்தனர். இறுதியில் 21-19 என்ற கணக்கில் இந்திய இணை கேமை வென்றது. அத்துடன் 21-17,21-19 என்ற கணக்கில் பிரிட்டன் ஜோடியை வென்றது.
எனினும் இந்த குரூபில் இந்திய வீரர்கள் 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் மூன்றாம் இடத்தை பிடித்தனர். ஒவ்வொரு குரூபிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இதனால் சத்விக் சாய்ராஜ்-சிராக் செட்டி ஜோடி குரூப் போட்டிகளுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளது.
10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதல் கலப்பு போட்டி நடைபெற்றது. இதில் முதல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் இளவேனில்-திவ்யான்ஷ் சிங் மற்றும் அஞ்சும் மோட்கில்-தீபக் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இளவேனில் மற்றும் திவ்யான்ஷ் பன்வார் மொத்தமாக 626.5 புள்ளிகள் பெற்று 12ஆவது இடத்தை பிடித்தனர். அஞ்சும் மோட்கில்-தீபக் குமார் 623.8 புள்ளிகள் எடுத்து 18ஆவது இடத்தை பிடித்தனர். முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறும். எனவே இரண்டு இந்திய அணிகளும் தகுதிச் சுற்றுடன் வெளியேறியுள்ளது.
மகளிர் 69 கிலோ எடை ப் பிரிவு குத்துச்சண்டை போட்டி இன்று நடைபெற்றது. இதில் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லோவ்லினா பார்கோயின் ஜெர்மனி நாட்டின் நடின் ஏப்டெஸை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளார். லோவ்லினா பார்கோயின் 3-2 என்ற கணக்கில் ஜெர்மனி வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.