டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் சரியாக 10 நாட்கள் உள்ளன. இந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்கும் முக்கிய விளையாட்டுகளில் ஒன்று மல்யுத்தம். மல்யுத்த பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த யார் யார் களமிறங்க உள்ளனர்? அவர்களின் பதக்க வாய்ப்பு எப்படி?
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியாவைச் சேர்ந்த 4 ஆடவர் மற்றும் 4 மகளிர் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தேர்வாகி இருந்தனர். இவர்களில் சுமித் மாலிக் மட்டும் போதை பொருள் பயன்பத்தியதால் தடை செய்யப்பட்டுள்ளார். இதனால் இம்முறை இந்தியாவில் இருந்து 7 பேர் களமிறங்க உள்ளனர்.
பஜ்ரங் புனியா:
மல்யுத்த விளையாட்டில் இந்தியாவின் முக்கியமான பதக்க வாய்ப்பு என்றால் அது இவர் தான். தன்னுடைய குரு மற்றும் பயிற்சியாளர் யோகேஷ்வர் தத் போல் இவரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முனைப்புடன் உள்ளார். யோகேஷ்வர் தத் 2012 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர். 65 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கும் பஜ்ரங் புனியா இந்தப் பிரிவில் ஒலிம்பிக் போட்டிகளில் தரவரிசயில் 2ஆவது இடத்தில் உள்ளார். ஆகவே இவர் நிச்சயம் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
தீபக் புனியா:
22 வயதான தீபக் புனியா ஒரு மல்யுத்த குடும்பத்தில் இருந்து வருகிறார். தொடக்கத்தில் தன்னுடைய பொழுதுபோக்காக ஆரம்பித்த மல்யுத்த விளையாட்டை பின்பு தீவிரமான பயிற்சியில் இறங்கியுள்ளார். இதன்விளைவாக 2019ஆம் ஆண்டு உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். அதே ஆண்டில் சீனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றார். தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 86 கிலோ எடைப் பிரிவில் இவர் 2ஆம் நிலை வீரராக உள்ளார். ஆகவே இவரும் பதக்கம் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரவிக்குமார் தஹியா:
23 வயதாகும் ரவிக்குமார் தஹியா 2008ஆம் ஆண்டு சுஷில் குமார் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வெல்வதை பார்த்து மல்யுத்த விளையாட்டிற்குள் வந்தார். 2015ஆம் ஆண்டு ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி பதக்கம் வென்றதன் மூலம் பிரபலம் அடைய தொடங்கினார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 57 கிலோ பிரிவில் இவர் 4ஆம் நிலை வீரராக உள்ளார். இதனால் குறைந்தப் பட்சம் இவர் ஒரு வெண்கலம் வெல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது.
வினேஷ் போகட்:
மகளிர் மல்யுத்த பிரிவில் இந்தியாவின் மிகப்பெரும் நம்பிக்கை நட்சத்திரம் வினேஷ் போகட் தான். 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். அந்த முறை அடைந்த ஏமாற்றத்தை இம்முறை இவர் பதக்கமாக மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போகட் சகோதரிகளில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு தங்கம் வெல்லுபவராக வினேஷ் இருப்பார் என்று பலரும் நம்பிக்கையாக உள்ளனர். 2021ஆம் ஆண்டில் இவருடைய ஃபார்ம் அவ்வளவு சிறப்பாக உள்ளது. 53 கிலோ எடைப்பிரிவில் உலக சாம்பியனை தோற்கடித்து தங்கம், ஆசிய மல்யுத்தத்தில் தங்கம், ரேங்கிங் சிரீஸ் மல்யுத்தத்தில் தங்கம் என மொத்தமாக நான்கு தங்க பதக்கங்களை இந்தாண்டு மட்டும் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 53 கிலோ பிரிவில் இவர் தான் முதல் நிலை வீராங்கனை. எனவே இவர் நிச்சயம் தங்கம் வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சீமா பிஸ்லா:
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா இவர் உலக ஒலிம்பிக் தகுதி போட்டிகளில் பங்கேற்று 50 கிலோ எடைப்பிரிவில் டோக்கியோ வாய்ப்பை பெற்றுள்ளார். 29 வயதாகும் சீமா பிஸ்லா ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்றார். 67 கிலோவில் தொடங்கிய மல்யுத்த பயணம் தற்போது 50 கிலோ பிரிவில் உள்ளது. இவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்ஷூ மாலிக்:
19 வயதாகும் அன்ஷூ மாலிக் ஹரியானாவில் இருந்த வந்த மற்றொரு வீராங்கனை. இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். அத்துடன் ஆசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த இளம் வீராங்கனை 57 கிலோ எடைப்பிரிவில் நன்றாக விளையாடும் பட்சத்தில் டோக்கியோவில் இந்தியாவிற்கு மற்றொரு பதக்கம் கிடைக்கும்.
சோனம் மாலிக்:
18 வயதாகும் சோனம் மாலிக் இந்தியா சார்பில் மிகவும் குறைந்த வயதில் ஒலிம்பிக் தகுதி பெற்ற மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இவரும் இந்தாண்டு நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று 62 கிலோ எடைப்பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெற்றார். இதே எடைப்பிரிவில் ரியோவில் சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார். அதைவிட சிறப்பாக செயல்பட்டு இந்த இளம் வீராங்கனை இப்பிரிவில் பதக்கம் வெல்லுவார் என்று அதிகம் ஏதிர்பார்க்கப்படுகிறது.
எனவே வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு மல்யுத்தத்தில் நான்கு பதக்கங்கள் வரை கிடைக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதை அந்த வீரர் வீராங்கனைகள் சரியாக பயன்படுத்தி கொண்டால் அந்த நான்கும் தங்கமாக கூட கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
மேலும் படிக்க: ‛முதலில் ஐபிஎல் கோப்பை வாங்கட்டும்... அப்புறம் உலகக்கோப்பை...’ விராட் கோலியை தாக்கிய சுரேஷ் ரெய்னா!