2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில், கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். அறிமுக போட்டி முதல், சிறந்த பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்து கொண்டு, இந்திய கேப்டனாக எழுச்சி கண்டு அணியை வழி நடத்தி சென்று கொண்டிருக்கிறார் கோலி. டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் அதிக புள்ளிகளோடு கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய அணியை முதல் இடத்தில் தக்க வைத்துள்ளார் கேப்டன் கோலி. ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘தி அல்டிமேட் டெஸ்ட்’ போட்டி என அழைக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது மூலம், கேப்டன் கோலி பதவி விலக வேண்டுமென்ற கருத்து வலு பெற்று வருகின்றது.



இந்நிலையில், விளையாட்டு இணையதளம் ஒன்றுக்கு ரெய்னா அளித்த பேட்டியில், கேப்டன் கோலியை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “கோலி, சிறந்த கிரிக்கெட் கேப்டன்களில் ஒருவர். புள்ளி விவரங்களும் அதை நிரூபிக்கின்றது. கோலிதான் உலகின் நம்பர்-1 பேட்ஸ்மேனும் கூட, அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில், கோலி இன்னும் ஒரு ஐசிசி கோப்பையை கூட வாங்கவில்லை என கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், அவர் இன்னும் ஐபிஎல் கோப்பையே வாங்கவில்லை. அவருக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். இனி அடுத்தடுத்து, டி-20 உலகக்கோப்பைகள், 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கின்றது. இறுதிப்போட்டி வரை அணியை வழிநடத்திச் செல்வது எளிதல்ல. சில சமயங்களில் சில தவறுகள் நடக்கலாம்.


இங்கிலாந்தில் இந்திய அணி தோற்றதற்கு வெப்ப சலனம் காரணமாக சொல்லப்பட்டாலும், இந்திய அணியின் பேட்டிங்கில் ஏதோ குறை இருக்கின்றது. அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்காதது அணிக்கு பின்னடைவாக அமைந்துவிட்டது. இன்னும் சில காலத்தில், இந்திய அணிக்கு ஐசிசி கோப்பையை வெல்லும். கேப்டன் கோலி கோப்பைகளை வெல்வார்” என ரெய்னா தெரிவித்துள்ளார். 



2014ஆம் ஆண்டு விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை பெற்றார். விராட் கோலி 61 டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய கேப்டனாக செயல்பட்டு 36 வெற்றி, 15 தோல்வி மற்றும் 10 டிரா செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன் கோலியின் வெற்றி சதவிகிதம் – 59!


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர்கள் இடத்திலேயே அவர்களை வென்றது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ‘அவே சீரிஸ்’ வெற்றிகளை பதிவு செய்த இந்திய அணி கேட்பன் என ரெக்கார்டுகள் இருந்தும் கோலியால் ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்று தர முடியவில்லை. கோலி மீது வைக்கப்படும் இந்த கருத்துக்கு அடுத்தடுத்து நடக்கும் ஐசிசி கோப்பை தொடர்களில் பெறும் வெற்றியின் மூலம் கேப்டன் பதில் சொல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.