டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் போட்டியிடுபவருக்கு கொரோனா தொற்று உறுதியானால் எதிராளிக்குத் தங்கப்பதக்கம் கொடுக்கப்படும் என ஒலிம்பிக் ஒழுங்குமுறை கமிட்டி அறிவித்துள்ளது.பாசிட்டிவ் உறுதியானவருக்கு வெள்ளி பதக்கம் தரப்படுமாம். விளையாட்டு வீரரின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஒழுங்குமுறை இறுதிப்போட்டிக்கு மட்டுமே பொருந்தும். இதுதவிர தொடக்கத்திலேயே கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவர் போட்டியிடத் தகுதியற்றவராக அறிவிக்கப்படாமல் தொடங்கவில்லை (Did not start) என மார்க் செய்யப்படுவார். இவற்றை ஒலிம்பிக் நிர்வாகக் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஜப்பானில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுஹே, “ஆகஸ்டு 22-ம் தேதி வரை, டோக்கியோவில் அவசரநிலை கடைபிடிக்கப்படும்” என முன்னர் அறிவித்திருந்தார்.
கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களுக்கு முன்னரே, வெளிநாட்டு ரசிகர்கள் ஒலிம்பிக் போட்டியை காண தடைவிதிக்கப்பட்டது. இந்த நிலையில், உள்ளூர் ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், ரசிகர்கள் இல்லாமல் ஒலிம்பிக் தொடர் நடைபெறும் என ஒலிம்பிக் கமிட்டி முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நாடுகளில் இருந்தும் ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்தியாவை பொருத்தவரை பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக் 2021 தொடருக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒலிம்பிக் தொடர் நடைபெற இருந்தால், உலகெங்கிலும் இருந்து 10,000க்கும் அதிகமான விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது சந்தேகம் அளிப்பதாக உள்ளது.
இந்தியாவில், பயோ-பபிள் நடைமுறைக்கு உட்பட்டு நடைபெற்று வந்த ஐபில் தொடர், கொரோனா பரவல் காரணமாக, வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த ஆண்டு தேதி அறிவிக்கப்படாமல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா பரவல் ஏற்படும் அச்சம் நிலவுவதால், ஒலிம்பிக் போன்ற பிரமாண்டமான விளையாட்டு தொடரை பாதுகாப்பான முறையில் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றி, பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக்கை நடத்த முடியும் என ஜப்பான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அந்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது மறுக்க முடியாத உண்மையாக உள்ளது. ஜப்பான் நாட்டு மக்களும் ஒலிம்பிக் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கிடையேதான் தற்போது குத்துச்சண்டை மல்யுத்தம் போன்ற தனிப்பட்ட விளையாட்டுகளுக்கான ஒழுங்குமுறைகளை சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகக் கமிட்டி அறிவித்து வருகிறது.