டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதலில் மகளிர் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டிகளுக்கு இந்தியா சார்பில் தேர்வாகி இருந்த ஒரே நபர் சானு மட்டும் தான். அவர் வெள்ளிப்பதக்கம் வென்று டோக்கியோவில் இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கி வைத்திருந்தார். தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றதால் அதில் பங்கேற்ற இந்திய வீரர் வீராங்கனைகள் நாடு திரும்பியுள்ளனர். அத்துடன் டோக்கியோவில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு மத்திய அரசு பாராட்டி சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. 


இந்நிலையில் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு இன்று கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது சானு தன்னுடைய வெள்ளிப்பதக்கத்தை சச்சின் இடம் காட்டி மகிழ்ந்தார். இந்தச் சந்திப்பு தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், "இன்று காலை சச்சின் சாரை நேரில் பார்த்தேன். அவர் என்னிடம் கூறிய வார்த்தைகள் எப்போதும் என்னுடன் இருக்கும். இந்தச் சந்திப்பு புதிய ஊக்கத்தை அளித்துள்ளது" எனப் பதிவிட்டுள்ளார். 






மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 1994-ஆம் ஆண்டு பிறந்தவர் மீராபாய் சானு. இவர் தன்னுடைய சிறு வயதில் அதிகமாக விறகு உள்ளிட்டவற்றை தன்னுடைய வீட்டு தேவைக்காக சுமந்து சென்றுள்ளார். அவர் அப்போது செய்த இந்த வேலை பின்நாட்களில் அவருடைய பளுத்தூக்குதலுக்கு உதவியாக இருந்துள்ளது. தன்னுடைய 11 வயதில் முதல் முறையாக உள்ளூர் பளுதூக்குதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். அதன்பின்னர் தேசிய அளவில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று முழு முனைப்புடன் இருந்தார். 2014-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்று அசத்தினார். எனினும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று அதிக வெளிச்சம் பெற தொடங்கியுள்ளார். 



ஒலிம்பிக் வரலாற்றில், இந்தியா சார்பாக வரலாறு படைத்த மீராபாய் சானுவிற்கு மணிப்பூர் மாநில காவல்துறையில், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் அறிவித்திருந்தார்.  அதுமட்டுமின்றி, பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு 1 கோடு ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளதாக பிரேன் சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ‛ரவி சாஸ்திரி அவுட், டிராவிட் இன்...’ இந்திய அணியின் பயிற்சியாளர் மாற்றமா?