டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தப் பிரிவில் அரையிறுதிப் போட்டியில் ரவிக்குமார் தாஹியா கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த நூருளிஸ்லாம் சனாயேவை எதிர்த்து விளையாடினார். அதில் கஜகஸ்தான் வீரரை பின் முறையில் தோற்கடித்து ரவிக்குமார் தாஹியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ரவிக்குமார் சனாயேவை பின்ஃபால் செய்ய முயற்சி செய்த போது கஜகஸ்தான் வீரர் ஆவரின் கையில் கடித்துள்ளார். இது தொடர்பான படமும் சமூக வலைதளத்தில் வெளியானது.


இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு இந்தச் சம்பவம் தொடர்பாக ரவிக்குமார் தாஹியா பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள அவர், "அரையிறுதி போட்டிக்கு அடுத்த நாள் சனாயேவ் என்னை சந்தித்தார். அப்போது அவர் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார். நான் எப்போது போட்டியில் நடப்பதை மேட்டை விட்டு வெளியே வந்தால் மறந்துவிடுவேன். ஆகவே அவர் மன்னிப்பு கூறியதை நான் ஏற்றுக் கொண்டேன். அத்துடன் நானும் அவரும் வேறு விஷயங்கள் தொடர்பாக பேசி அன்று சிரித்து மகிழ்ந்தோம்.


மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம், வெண்கலப்பதக்கம் ஆகிய இரண்டும் கிடைத்துள்ளது. தங்கம் மட்டும் இதுவரை கிடைத்ததில்லை. அதை நான் நிச்சயம் வெல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து தங்கப்பதக்கத்தை தவறவிட்டது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. எனக்கு இப்போது 23 வயது தான் ஆகிறது. ஆகவே அடுத்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கத்தை நிச்சயம் வெல்வேன்" எனக் கூறியுள்ளார். 


 






முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், "இது மிகவும் அநியாயமான செயல். வெட்கக்கேடு. அவருக்கு ரவிக்குமாருடன் போட்டியில் மோத முடியாமல் இதைச் செய்துள்ளார். நல்ல வேளை இது ரவிக்குமாரின் ஆட்டத்தை பாதிக்கவில்லை. இது கஜகிஸ்தான் வீரர் சனாயேவ் செய்த வறுந்தக்க செயல். ரவிக்குமார் தாஹியா நீங்கள் சிறப்பாக சண்டை செய்து விளையாடினீர்கள்" எனக் கூறியிருந்தார்.


மேலும் படிக்க: இந்திய பேட்ஸ்மேன்களும் லார்ட்ஸ் மைதானமும் - சோகமான தொடர்கதை !