இந்தியாவில் நடக்க இருந்த உலகக்கோப்பை டி-20 தொடர் ஐக்கிய அரபு அமீகரத்திற்கு மாற்றப்பட்டது. வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் டி-20 கோப்பையில் விளையாட இந்திய அணி தயாராகி வருகின்றது. அதற்கு முன்பு, இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளனர்.
இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக பதவி வகிக்கும் ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் முடிவுக்கு வருகின்றது. எனவே, டி-20 உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவி சாஸ்திரி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், இலங்கையுடன் நடைபெற்ற ஒருநாள் போட்டிகள் மற்றம் டி20 தொடரில் ஷிகர்தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்த தொடருக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டார். ராகுல் டிராவிட்டின் சிறப்பான பயிற்சியின்கீழ் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றநிலையில், கொரோனாவால் வீரர்கள் அவதிப்பட்டதால் அனுபவமற்ற வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி டி-20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வரும் நவம்பர் மாதம் பிசிசிஐ-யிடம் விண்ணபங்களை சமர்ப்பிக்க வேண்டும். எனவே, ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட்டிங் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது, கிரிக்கெட் விமர்சகர்களும் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
இந்திய அணியின் பயிற்சியாளர் என்பது குறித்து உலகக்கோப்பை வென்ற முன்னாள் இந்திய அணி கேப்டனான கபில் தேவ், ஏபிபி செய்திக்கு அளித்த பேட்டியில் பேசும்போது, “இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான டி-20 மற்றும் ஒரு நாள் தொடரின் முடிவுகளைப் பொருத்து முடிவு செய்யலாம். இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க விரும்பினால், தாராளமாக நியமிக்கலாம். அதே சமயம், ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தொடர விரும்பினால், தொடர்வதில் ஏதும் சிக்கல் இல்லை” என சூசகமாக தெரிவித்துள்ளார்.
ராகுல் டிராவிட் இந்திய அணியின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராக பணியாற்றியுள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராகவும் ராகுல் டிராவிட் பணியாற்றியுள்ளனர். சுப்மான் கில், இஷான்கிஷான் என இந்திய அணியின் வளரும் வீரர்கள் பலரும் ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டது குறித்து டிராவிட் பேசும்போது, “இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைந்து பணியாற்றியதை நான் மிகவும் விரும்பினேன். சீனியர் அணிக்கு முழுநேர பயிற்சியாளராக பணியாற்றுவது மிகவும் கடினமாக இருந்தது” என தெரிவித்திருந்தார்.
கடினமாக இருந்தாலும், சவாலை ஏற்க டிராவிட் சரியாக தேர்வாக இருப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்