டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதல் நாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் முதலில் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சந்தேலா இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமால் ஏமாற்றம் அளித்தனர். வில்வித்தையில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 


 






இந்தச் சூழலில் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல்-மானிகா பட்ரா இணை சீன தைபேவின் மூன்றாம் நிலை ஜோடியான லின்-செங் ஜோடியை எதிர்கொண்டது. இதில் தொடக்க முதலே சீன தைபே ஜோடி அதிரடி காட்டியது. அவர்கள் தொடர்ந்து 4 செட்களையும் கைபற்றி அசத்தினர். இந்திய ஜோடி சற்று போராடினாலும் அவர்களால் ஒரு செட்டை கூட வெல்ல முடியவில்லை. இதனால் 11-8, 11-6, 11-5, 11-4 என்ற நேர் செட் கணக்கில் சீன தைபே ஜோடி வெற்றிப் பெற்றது. இதனால் முதல் சுற்றிலேயே இந்திய இணையான சரத் கமல்-மானிகா பட்ரா ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது. முதல் நாளான இன்று அடுத்து மகளிர் ஒற்றையர் சுற்று போட்டிகளில் நடைபெற உள்ளன. அதில் மானிகா பட்ரா மற்றும் சுடிர்தா முகர்ஜி ஆகியோ பங்கேற்க உள்ளனர். 


 






டோக்கியோ ஜூடோ பிரிவில் இந்தியா சார்பில் 60 கிலோ எடைப்பிரிவில் சுஷிலா தேவி தகுதி பெற்று இருந்தார். அவர் இன்று ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எவாவை எதிர்த்து சண்டையிட்டார். அதில் சிறப்பாக விளையாடிய எவா இந்திய வீராங்கனை சுஷிலா தேவியை தோற்கடித்தார். ஹங்கேரியைச் சேர்ந்த எவா இறுதிப் போட்டிக்கு செல்லும் பட்சத்தில் சுஷிலா தேவிக்கு ரெபிசார்ஜ் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். அதில் வெற்றி பெற்றால் வெண்கலப்பதக்க போட்டிக்கு சுஷிலா தேவி தகுதிப் பெறுவார். 


முன்னதாக இந்திய ஆடவர் ஹாக்கி அணி நியூசிலாந்து அணியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. நாளை நடைபெறும் அடுத்த லீக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாட உள்ளது. 


மேலும் படிக்க: டோக்கியோ ஒலிம்பிக்: நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அசத்தல் வெற்றி!