டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நேற்று கோலகலமாக தொடங்கியது. இன்றைய முதல் நாளில் துப்பாக்கிச் சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சந்தேலா ஆகியோர் பங்கேற்றனர். முதலில் 6 சுற்றுகள் கொண்ட தகுதி போட்டி நடைபெற்றது. இதில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் இறுதி சுற்றுக்கு தகுதிப் பெறுவார்கள். இதில் இளவேனில் மற்றும் அபூர்வி ஆகிய இருவரும் தொடக்கம் முதலே தடுமாறி வந்தனர்.
இறுதியில் இளவேனில் 104.3, 104.0, 106.0,104.2,103.5,104.5 என மொத்தமாக 626.5 புள்ளிகள் எடுத்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான அபூர்வி சந்தேலா 104.5,102.5,104.9,104.2,102.2,103.6 என மொத்தமாக 621.9 புள்ளிகள் பெற்றார். இளவேனில் 16ஆவது இடத்தையும், அபூர்வி சந்தேலா 36ஆவது இடத்தையும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் இவர்கள் இருவரும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம் அளித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் அடுத்து கலப்பு பிரிவில் சாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இன்று காலை ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டிகள் உள்ளன. அதில் இந்தியா சார்பில் சவுரவ் சௌதரி மற்றும் அபிஷேக் வர்மா பங்கேற்க உள்ளனர். இவர்கள் சாதிப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதற்கிடையே வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவில் தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகிய இருவரும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இவர்கள் இருவரும் முதல் சுற்றில் சீன தைபே அணியை எதிர்கொண்டனர். அதில் 5-3 என்ற கணக்கில் இந்திய ஜோடி சீன தைபே ஜோடியை வீழ்த்தியது. இதன்மூலம் அடுத்து நடைபெற உள்ள காலிறுதிச் சுற்றுக்கு இவர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். காலிறுதிச் சுற்றில் இவர்கள் கடினமான தென் கொரிய அணியை எதிர்த்து விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: அவிஷ்கா அதிரடியில் இலங்கை ஆறுதல் வெற்றி; முன்னிலையால் கோப்பையை தன்னிலையாக்கிய இந்தியா!