டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி குரூப் ஏ பிரிவில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் முதல் போட்டியில் மோதினர். இதில் தொடக்க முதலே இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் முதலில் நியூசிலாந்து வீரர்கள் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய நியூசிலாந்து அணி முதல் கோலை அடித்தது.  அதன்மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பின்னர் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொண்டனர். அதில் கோல் அடிக்க முயற்சித்த போது பந்து நியூசிலாந்து வீரரின் காலில் பட பெனால்டி ஸ்டோர்க் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை ரூபிந்தர் பால் சிங் சிறப்பாக கோலாக மாற்றினார். இதனால் இந்தியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. 


முதல் காலிறுதி முடிவில் இரு அணிகளும் அடுத்து கோல் அடிக்க எடுத்த முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இரண்டாவது காலிறுதியில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். அதில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஹர்மன்பிரீத் சிங் சிறப்பாக கோலாக மாற்றினார். இதனால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் பாதியின் முடிவில் இந்திய அணி வலுவான நிலையில் 2-1 என்ற முன்னிலையுடன் சென்றது. 




இதைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது காலிறுதியில் இந்திய அணி தொடக்கத்திலேயே மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்றது. அதையும் ஹர்மன்பிரீத் சிங் சிறப்பாக பயன்படுத்தினார். அதிலும் அசத்தலாக கோல் அடித்து இந்திய அணியின் முன்னிலையை 3-1 என உயர்த்தினார். மூன்றாவது காலிறுதியின் இறுதி நேரத்தில் நியூசிலாந்து வீரர்கள் சற்று சுதாரித்து கொண்டு ஆட தொடங்கினர். அப்போது ஒரு அட்டகாசமான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. இதை அந்த அணியின் ஜென்சன் கோலாக மாற்றினார். இதனால் நியூசிலாந்து அணி 2-3 என இந்தியாவின் முன்னிலையை குறைத்தது. 


அதன்பின்னர் நடைபெற்ற நான்காவது காலிறுதியில் இரு அணியின் வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். குறிப்பாக கடைசி நிமிடங்களில் நியூசிலாந்து அணிக்கு மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தது. அதில் இந்திய கோல் கீப்பர் ஶ்ரீஜேஷ் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்து வீரர்களின் முயற்சியை முறியடித்தார். அதன்பின்னர் 24 விநாடிகள் இருந்தப் போது நியூசிலாந்து அணி கடைசியாக பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்றது. அதில் மீண்டும் இந்திய அணியின் கோல் கீப்பர் பி.ஆர்.ஶ்ரீஜேஷ் சிறப்பாக செயல்பட்டார். இறுதியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் சிங் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். இந்திய அணி நாளை நடைபெறும் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. 


மேலும் படிக்க: டோக்கியோ ஒலிம்பிக்: வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா-பிரவீன் காலிறுதிக்கு முன்னேற்றம் !