டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் இந்தியாவின் தீபிகா குமாரி 9ஆவது இடத்தை பிடித்தார். அதேபோல் ஆடவர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் 31ஆவது இடத்தை பிடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அடானு தாஸ் 35ஆவது இடத்தை பிடித்தார். இதனால் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா குமாரி யாருடன் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்தது. இதில் இந்திய வில்வித்தை சங்கம் டோக்கியோ தகுதிச் சுற்றில் 31ஆவது இடத்தைப் பிடித்த பிரவீன் ஜாதவ் உடன் தீபிகா குமாரியை ஜோடி சேர்த்தது.

  


 






இந்நிலையில் வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவில் தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகிய இருவரும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இவர்கள் இருவரும் முதல் சுற்றில் சீன தைபே அணியை எதிர்கொண்டனர். அதில் 5-3 என்ற கணக்கில் இந்திய ஜோடி சீன தைபே ஜோடியை வீழ்த்தியது. இதன்மூலம் அடுத்து நடைபெற உள்ள காலிறுதிச் சுற்றுக்கு இவர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். காலிறுதிச் சுற்றில் இவர்கள் கடினமான தென் கொரிய அணியை எதிர்த்து விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய இணை காலிறுதிக்கு முன்னேறியது தொடர்பாக பலரும் ட்விட்டரில் தங்களது வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர். துபாக்கிச் சுடுதல் வீராங்கனைகளை சற்று ஏமாற்றினாலும் வில்வித்தை வெற்றி இந்திய ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் தரும் வகையில் அமைந்துள்ளது. 


முன்னதாக நேற்று நடைபெற்ற ஒலிம்பிக் வில்வித்தை தகுதிச் சுற்று போட்டிகளில் இந்திய வீரர்களான அடானு தாஸ், பிரவீன் ஜாதவ் மற்றும் தருண்தீப் ராய் ஆகியோர் கொண்ட இந்திய அணி ஆடவர் குழு பிரிவில் 9ஆவது இடத்தை பிடித்தது. பிரவீன் ஜாதவ் 656, அடானு தாஸ் 653, தருண்தீப் ராய் 652 என மொத்தமாக சேர்ந்து 9ஆவது இடத்தை பிடித்தனர். இதனால் இந்திய அணிக்கு அடுத்து குழு பிரிவில் காலிறுதிச் சுற்றில் வலுவான தென்கொரிய அணியுடன் மோதும் வாய்ப்பு உருவாகியுள்ளது. வில்வித்தை பிரிவில் மிகவும் பலம் வாய்ந்த அணி தென்கொரியா என்பதால் அவர்களுக்கு பதக்க வாய்ப்பு சற்று குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இளவேனில், அபூர்வி ஏமாற்றம்!