டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டிகளுக்கு இந்தியா சார்பில் அமித் பங்கல் (52 கிலோ),மணிஷ் கெளசிக் (63 கிலோ), ஆஷிஷ் குமார் (69 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69கிலோ), சதீஷ் குமார் (91 கிலோ), மேரி கோம் (51 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ). லோவ்லினா பார்கோயின் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ) ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர். இவர்களில் விகாஸ் கிருஷ்ணன், மணிஷ் கௌசிக், ஆஷிஷ் குமார் ஆகிய மூவரும் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினர்.
இந்நிலையில் மகளிர் 69 கிலோ எடை ப் பிரிவு குத்துச்சண்டை போட்டி இன்று நடைபெற்றது. இதில் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லோவ்லினா பார்கோயின் ஜெர்மனி நாட்டின் நடின் ஏப்டெஸை எதிர்த்து மோதினார். இதில் முதல் ரவுண்ட்டில் இரு வீராங்கனைகளும் சிறப்பாக சண்டை செய்தனர். அதிலும் குறிப்பாக லோவ்லினா போர்கோயின் நன்றாக தடுப்பு ஆட்டத்தை மேற்கொண்டு அந்த ரவுண்டை வென்றார்.
அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது ரவுண்டில் ஜெர்மனி வீராங்கனை கடுமையாக முயற்சி செய்தார். அப்போதும் அவரை திறமையாக லோவ்லினா எதிர்கொண்டார். அதிலும் சிறப்பாக சண்டை செய்த லோவ்லினா கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டார். இறுதியில் லோவ்லினா பார்கோயின் 3-2 என்ற கணக்கில் ஜெர்மனி வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் காலிறுதிச் சுற்றில் வெற்றி பெரும் பட்சத்தில் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கத்தை அவர் உறுதி செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற 51 கிலோ எடைப்பிரிவு மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மேரி கோம் டொமினிக்கன் குடியரசு நாட்டின் ஹெர்னாண்ட்ஸ் கார்சியாவை எதிர்த்து மோதினார். இந்தப் போட்டியில் 4-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று அசத்தினார். 38 வயதான இந்திய நட்சத்திரம் மேரி கோம் தன்னைவிட 15 வயது குறைவான வீராங்கனையை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
மகளிர் பிரிவில் இன்னும் பூஜா ராணி(75 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ) ஆகியோர் இன்னும் தங்களது போட்டியில் களமிறங்கவில்லை. நாளை நடைபெறும் போட்டியில் பூஜா ராணி அல்ஜிரியா நாட்டைச் சேர்ந்த செயிப் இச்சார்கை எதிர்த்து விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் சத்விக்-சிராக் ஜோடி ஆறுதல் வெற்றியுடன் வெளியேற்றம்..!