டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் போட்டிகளில்  ஆடவர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின்  சரத் கமல் விளையாடினார்.  அவர் போர்ச்சுகல் வீரரை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன்மூலம் ஆடவர் ஒற்றையிர் பிரிவில் முதல் முறையாக ஒலிம்பிக் வரலாற்றில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.


இந்நிலையில் இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில் சீனாவின் மா லாங்கை எதிர்த்து விளையாடினார். அதில் முதல் கேமில் சிறப்பாக விளையாடிய சீன வீரர் 9 நிமிடங்களில் 11-7 என வென்றார். இரண்டாவது கேமில் சரத் கமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 10 நிமிடங்களில் அந்த கேமை 11-8 என்ற கணக்கில் வென்றார். இதனால் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை எடுத்து வந்தனர். 


மூன்றாவது கேமில் ஒரு கட்டத்தில் இரு வீரர்களும் 11-11 என புள்ளிகள் எடுத்திருந்தனர். இறுதியில் அந்த கேமை மா லாங் 13-11 என்ற கணக்கில் வென்றார். அடுத்த நடைபெற்ற நான்காவது போட்டியில் மா லாங் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்தினார். அந்தப் போட்டியை 7 நிமிடங்களில் 11-4 என்ற கணக்கில் வென்றார். ஐந்தாவது கேமை 11-4 என்ற கணக்கில் மா லாங் வென்றார். இதனால் சரத் கமல் மூன்றாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். முன்னதாக நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்று போட்டியில் இந்தியாவின் மானிகா பட்ரா 8-11,2-11,5-11,7-11 என்ற கணக்கில்  ஆஸ்திரியாவின்  போல்கனோவாவிடம் தோல்வி அடைந்தார். டேபிள் டென்னிஸ் ஒலிம்பிக் வரலாற்றில் எந்த ஒரு இந்திய வீரர் வீராங்கனையும் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்றில் பங்கேற்றதில்லை. அதை உடைத்திருந்த மானிகா பட்ரா மூன்றாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.  


 






அதேபோல ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சத்யன் ஹாங்காங் வீரரிடம்  தோல்வி  அடைந்து வெளியேறினார்.  முதல் நாளில்  நடைபெற்ற கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல்-மானிகா பட்ரா இணை சீன தைபேவின் மூன்றாம் நிலை ஜோடியான லின்-செங் ஜோடியிடம் 4-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. ஏற்கெனவே மகளிர் ஒற்றையர் பிரிவில் சுதிர்தா முகர்ஜியும் வெளியேறினார். 


மேலும் படிக்க: டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஆடவர் ஹாக்கி ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா அசத்தல்..!