டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டிகளில் குரூப் ஏ பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா 3-2 என வீழ்த்தியது. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் 7-1 என தோல்வி அடைந்தது. இந்நிலையில் இன்று தனது மூன்றாவது குரூப் போட்டியில் இந்திய அணி ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். சிம்ரன்ஜீத் சிங் ஒரு ஃபில்டு கோல் அடித்து இந்தியாவிற்கு முன்னிலை பெற்று தந்தார். அதற்கு அடுத்த சில நிமிடத்தில் இந்தியாவிற்கு ஒரு பெனால்டி ஸ்டோர்க் வாய்ப்பு கிடைத்தது. அதை ரூபிந்தர் பால் சிங் சரியாக பயன்படுத்தி கோலாக மாற்றினார். இதனால் முதல் கால்பாதியின் முடிவில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கால்பாதியில் ஸ்பெயின் அணியின் வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இறுதியில் முதல் பாதியின் முடிவில் இந்திய அணி 2-0 என அதே முன்னிலையில் தொடர்ந்தது. மூன்றாவது கால்பாதியிலும் இரு அணியின் வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.
நான்காவது கால் பாதியில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை ரூபிந்தர் பால் சிங் சிறப்பாக பயன்படுத்தி மற்றொரு கோல் அடித்தார். இதனால் 3-0 என்ற கணக்கில் இந்தியா மேலும் முன்னிலை பெற்றது. ஆட்டநேர இறுதியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை தோற்கடித்து வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.
இந்திய அணி அடுத்து நாளை மறுநாள் காலை 6.00 மணிக்கு நடைபெற உள்ள போட்டியில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து விளையாட உள்ளது. ஒரு தோல்வி இரண்டு வெற்றிகளுடன் இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது. அர்ஜென்டினா அணியை தோற்கடிக்கும் பட்சத்தில் இந்திய அணியின் காலிறுதி வாய்ப்பு கிட்டதட்ட உறுதியாகிவிடும். குரூப் பிரிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு துப்பாக்கிச்சுடுதலில் மனு பாக்கர்-சவுரப் சௌதரி ஏமாற்றம்