டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் பிரிவில் குரூப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆடவர் இரட்டையர் பிரிவில் சத்விக் சாய்ராஜ் ரன்கிரெட்டி மற்றும் சிராக் செட்டி சீன தைப்பே வீரர்களை தோற்கடித்தனர். இரண்டாவது குரூப் போட்டியில் உலகின் நம்பர் இரட்டையர் இணையான இந்தோனேஷியாவின் கேவின் சஞ்சையா மற்றும் மார்கஸ் ஜோடியை எதிர்த்து களமிறங்கியது. 21-13,21-12 என்ற நேர் செட் கணக்கில் உலகின் நம்பர் ஒன் இரட்டையர் இணை இந்தியாவின் சத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் செட்டியை தோற்கடித்தனர். இதனால் கடைசி குரூப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை உருவானது. 


இந்நிலையில் இன்று சத்விக்-சிராக் இணை பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த வென்டி-லென் இணையை எதிர் கொண்டது. இந்தப் போட்டியில் முதல் கேமை இந்தியாவின் சத்விக் சாய்ராஜ்-சிராக் செட்டி இணை 21-17 என்ற கணக்கில் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமில் பிரிட்டன் வீரர்கள் சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் இந்திய வீரர்கள் அவர்களை சிறப்பாக சமாளித்தனர். இறுதியில் 21-19 என்ற கணக்கில் இந்திய இணை கேமை வென்றது. அத்துடன் 21-17,21-19 என்ற கணக்கில் பிரிட்டன் ஜோடியை வென்றது. 


எனினும் இந்த குரூபில் இந்திய வீரர்கள் 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் மூன்றாம் இடத்தை பிடித்தனர். ஒவ்வொரு குரூபிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இதனால் சத்விக் சாய்ராஜ்-சிராக் செட்டி ஜோடி குரூப் போட்டிகளுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளது. 






முன்னதாக மகளிர் ஒற்றையர் பிரிவில் குரூப் போட்டியில் நேற்று பி.வி.சிந்து இஸ்ரேல் வீராங்கனையை எதிர்கொண்டார். அதில் சிறப்பாக விளையாடிய சிந்து 21-7,21-10 என்ற கணக்கில் 28 நிமிடங்களில் வென்று அசத்தினார். அடுத்த போட்டியில் பி.வி.சிந்து ஹாங்காங் வீராங்கனை செங்கை எதிர்த்து விளையாட உள்ளார்.  தற்போது டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பிரிவில் சிந்து மட்டுமே காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் முடிவிற்கு வந்த இந்திய பயணம்.. சரத் கமல் தோல்வி..!