Neeraj Chopra | சாதனை தங்கம் வென்று, அன்பின் பரிசு மழையில் நனையும் நீரஜ் சோப்ரா ....!

ஒலிம்பிக் போட்டியில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தை ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா வென்று அசத்தியுள்ளார்.

Continues below advertisement

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் வீசி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். தன்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள 23 வயதான இவர், இந்தியாவிற்காக தடகளத்தில் தனது முதல் தங்கத்தை வென்று அசத்தியுள்ளார். பெரிய போட்டிகளில் தங்கம் வெல்வது ஒன்றும் நீரஜ் சோப்ராவிற்கு புதிதல்ல. அவர் இதற்கு முன்பாக பல தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 

Continues below advertisement

உதாரணமாக, 2016 உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் தங்கம், 2016ம் ஆண்டு தெற்காசிய போட்டியில் தங்கம், 2017-ஆம் ஆண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தங்கம், 2018-ஆம் ஆண்டு காமென்வெல்த் போட்டியில் தங்கம், 2018ம் ஆண்டு ஆசிய போட்டியில் தங்கம் எனப் பல தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். அந்த வரிசையில் தற்போது ஒலிம்பிக் தங்கமும் இணைந்துள்ளது. இந்தச் சூழில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பல மாநில அரசுகள் பரிசுகளை அறிவித்துள்ளது. 


அந்தவகையில் அவருடைய சொந்த மாநிலமான ஹரியானாவில் அவருக்கு 6 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அரசு சார்பில் அவருக்கு 2 கோடி ரூபாய் பரிசை அறிவித்துள்ளது. அதேபோல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ 1 கோடி ரூபாய் பரிசை வழங்கவதாக தெரிவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியும் தன்னுடைய பங்கிற்கு 1 கோடி ரூபாய் பரிசும் நீரஜ் சோப்ரா வீசிய 87.58 மீட்டரை குறிக்கும் வகையில் 8758 என்ற நம்பரில் ஒரு ஜெர்ஸியையும் வெளியிட உள்ளதாக கூறியுள்ளது. மணிப்பூர் அரசும் தன் பங்குக்கு நீரஜ் சோப்ராவிற்கு ஒரு கோடி ரூபாய் பரிசை அறிவித்துள்ளது. 

பிரபல விமான சேவை நிறுவனமான இன்டிகோ 2021 ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் 2022 ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நீரஜ் சோப்ரா தன்னுடைய விமானங்களில் கட்டணம் இன்றி பயணம் செய்ய ஒரு சலுகையை அறிவித்துள்ளது. இவை தவிர பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தன்னுடைய மகேந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 ரக கார் ஒன்று நீரஜ் சோப்ராவிற்கு பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எலான் குழுமத்தின் தலைவர் ராகேஷ் கபூர் தன்னுடைய குழுமம் சார்பில் 25 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.  இவ்வாறு தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பலரும் பரிசுகளை அடுத்தடுத்து அறிவித்து வருவதால் அவர் பரிசு மழையில் நனைந்து வருகிறார். 

இவ்வளவு பரிசு மலையில் நீரஜ் சோப்ரா நனைய முக்கியமான காரணம் 13 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்றதுதான். 2008-ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றார். அவருக்கு பிறகு தனி நபராக இந்தியாவிற்கு இரண்டாவது தங்கத்தை வென்று புதிய வரலாற்றை நீரஜ் சோப்ரா எழுதியுள்ளார். 

மேலும் படிக்க: ஒரே எறியில் உலக நாடுகளை நடுங்க வைத்த நீரஜ் சோப்ரா: இந்த ஈட்டிக்கு போட்டி யாரு?

Continues below advertisement