டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் வீராங்கனைகள் போட்டிகள் அனைத்தும் இன்றுடன் முடிவடைந்து விட்டன. இம்முறை இந்திய அணி ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தமாக 7 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. அத்துடன் இதற்கு முன்பாக 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வென்று இருந்த 6 பதக்கங்கள் என்ற எண்ணிக்கையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது. மேலும் 13ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் தங்கம் வென்றுள்ளது. கடைசியாக இந்தியா 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம் வென்றது.  அதன்பின்னர் மீண்டும் தங்கம் வென்று அசத்தியுள்ளது. 


இந்நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர் வீராங்கனைகள் யார் யார்?


1. மீராபாய் சானு (வெள்ளி):




மகளிர் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று டோக்கியோவில் இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார். 


2. லோவ்லினா பார்கோயின்:




மகளிர் 69 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதியில் தோல்வி அடைந்து லோவ்லினா பார்கோயின் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கத்தை பெற்று தந்தார். 


3. பி.வி.சிந்து:




மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப்பதக்க போட்டியில் அகென் யமாகுச்சியை வீழ்த்தி பதக்கம் வென்றார். அத்துடன் தொடர்ச்சியாக இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார். 


4.  ரவிக்குமார் தாஹியா: 




ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். சுஷில் குமாருக்கு பிறகு ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெள்ளி வென்ற இரண்டாவது இந்திய மல்யுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 


5. இந்திய ஆடவர் ஹாக்கி அணி:




இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதியில் பெல்ஜியம் அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால் வெண்கலப் பதக்க போட்டியில் ஜெர்மனி அணியை எதிர்கொண்டது. அதில் 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றது. அத்துடன் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கியில் பதக்கம் வென்று சாதித்தது. 


6. பஜ்ரங் புனியா:




டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் மிகப்பெரிய பதக்க எதிர்பார்ப்புகளில் ஒருவர் பஜ்ரங் புனியா. அவர் 65 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதியில் 3 முறை உலக சாம்பியன் இடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார். எனினும் வெண்கலப்பதக்க போட்டியில் கஜகிஸ்தான் வீரரை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். 


7. நீரஜ் சோப்ரா:




டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் ஒரே தங்கத்தை வென்றவர் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தான். இதன்மூலம் நீண்ட நாளாக இருந்த ஒலிம்பிக் தங்கப்பதக்க ஏகத்தையும் அவர் உடைத்தார். 


மொத்தமாக இந்திய அணி இம்முறை பதக்கப்பட்டியலில் 7 பதக்கங்களுடன் 47ஆவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:எப்போதும் கூல்: அது தான் அவர் ஸ்டைல் - அசர வைக்கும் நீரஜ் சோப்ரா..!