பிரேசிலில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிட்டன் பிரிவில் 3 தங்க பதக்கங்களை வென்று மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா சாதனை படைத்துள்ளார். மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த ஜெயரட்சகன் மகள் ஜெர்லின் அனிகா (17). மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் இவர், பேட்மிட்டன் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
பிரேசிலில் நடைபெற்ற 24வது செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிட்டன் பிரிவு போட்டியில் பங்கேற்றார். அதில், ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியாவின் கே.நியூடோல்ட்டை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் ஜெர்லின் அனிகா - அபினவ் சர்மா ஜோடி மலேசியாவின் பூன் - டியோ ஜோடியை வீழ்த்தி பதக்கம் வென்றுள்ளது. மேலும் குழு பேட்மிட்டன் போட்டியிலும் தங்கம் வென்று மொத்தமாக மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார். இந்த நிலையில் மதுரை ரயில் நிலையத்திற்கு வருகை தந்த ஜெர்லின் அனிகாவுக்கு அவரது பள்ளி தோழிகள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜெர்லின் அணிகாவை நேரில் அழைத்து வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி பாராட்டியதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை ஊக்கத்தொகையாக வழங்கினார். தங்கப்பதக்கம் வென்ற ஜெர்லின் அணிகாவை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்ததுடன் , மாணவி 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதவும் தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஜெர்லின் அனிகாவின் தந்தை ஜெயரட்சகன் கூறுகையில்..,” மாநகராட்சி பள்ளியில் பயின்று பேட்மிட்டன் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு தனது மகள் வெற்றி பெற்று பதக்கங்கள் வென்று அரசு பள்ளி மாணவர்களும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை அனைவரிடத்திலும் விதைத்து உள்ளார். தொடர்ந்து தமிழக அரசு ஜெர்லின் அனிதாவிற்கு உரிய அங்கீகாரம் வழங்கி தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஊக்கமளிக்க வேண்டும். மதுரை மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மே -21ம் தேதி தேதி டெல்லியில் பிரதமர் மோடி அவர்கள் ஜெர்லினை பாராட்ட உள்ளார். அன்று காலை அவருடன் உணவு அருந்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தேனி : திமுக உட்கட்சி தேர்தல்: தேனி மாவட்ட செயலாளர் பதவி யாருக்கு?