டோக்கியோ ஒலிம்பிக் தொடங்க இன்னும் 2 நாட்கள் உள்ளன. இதற்கான முழு வேகத்தில் அனைத்து நாடுகளும் இறங்கியுள்ளன. அத்துடன் போட்டியின் ஏற்பாட்டாளர்களும் துவக்க விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தும் சூழலில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து வருகின்றனர். இந்தியா சார்பில் பங்கேற்கும் தடகள வீரர் வீராங்கனைகள் நேற்று டோக்கியோ புறப்பட்டு சென்றனர். மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் அங்கு தொடர்ந்து வந்து கொண்டு உள்ளனர்.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மிகவும் குறைந்த வயதில் பங்கேற்க உள்ளவர் சிரியாவை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஹெண்ட் ஷாஷா. இவர் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகளில் வெற்றிப் பெற்று தன்னுடைய 11 வயதில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் இந்த ஆண்டு 12 வயதான இவர் பங்கேற்கிறார். மேலும் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் வரலாற்றில் மிகவும் குறைவான வயதில் பங்கேற்ற வீராங்கனை என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். 13 வயதுக்குட்பட்டோருக்கான தரவரிசையில் உலகளவில் இவர் 46 ஆவது இடத்தில் உள்ளார்.
இந்தச் சூழலில் இந்தியா சார்பில் குறைவான வயதில் பங்கேற்றவர் யார் தெரியுமா?
அரத்தி சாஹா:
1940ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர் ஆரத்தி சஹா. தன்னுடைய 4 வயது முதல் நீச்சலில் ஆர்வம் காட்டினார். குறிப்பாக கொல்கத்தாவிலுள்ள ஹூக்ளி ஆற்றில் தன்னுடைய நீச்சல் பயணத்தை தொடங்கினார். 5 வயதில் சச்சின் நாக் என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று தன்னுடைய முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். அதன்பின்னர் 1952ஆம் ஆண்டு ஹெலின்ஸ்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஒலிம்பிக் போட்டியில் தன்னுடைய 11 வயது 10 மாதங்களில் பங்கேற்றார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா சார்பில் மிகவும் பங்கேற்ற குறைவான வயதில் பங்கேற்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
அந்த ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு 1959ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலீஷ் சேனல் என்று சொல்லப்படும் கடற்பகுதியை கடந்து இவர் சாதனைப் படைத்தார். இங்கிலீஷ் சேனலை நீந்தி கடந்த முதல் ஆசிய பெண் இவர்தான். இவருடைய சாதனைகளை பாராட்டி இந்திய அரசு 1960 பத்மஶ்ரீ விருதை அளித்தது. பத்மஶ்ரீ விருதை வென்ற முதல் விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். இவருடை சாதனை பல பெண்களை அப்போது விளையாட்டு பக்கம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் வரலாற்றில் 1896ஆம் ஆண்டு ஏதன்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் கிரேக்க நாட்டைச் சேர்ந்த டிமிட்ரியஸ் லாண்டூரஸ் என்ற வீரர் 10 வயது 218 நாட்களில் பங்கேற்றார். அவரே ஒலிம்பிக் வரலாற்றில் மிகவும் குறைவான வயதில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.
மேலும் படிக்க: டோக்கியோ ஒலிம்பிக்கில் களமிறங்கும் இரண்டாவது இந்திய தம்பதி தீபிகா - அடானு.. முதல் ஜோடி யார் தெரியுமா?