டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 3 நாட்கள் உள்ளன. இதற்காக இந்திய வீரர் வீராங்கனைகள் டோக்கியோ சென்றுள்ளனர். இன்று மாலை இந்திய தடகள வீரர் வீராங்கனைகள் டோக்கியோவிற்கு செல்ல உள்ளனர். கடந்த 17-ஆம் தேதி முதற்கட்டமாக 88 வீரர் வீராங்கனைகள் சென்று இருந்தனர். அவர்கள் அனைவரும் டோக்கியோவில் தங்களுடைய பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்தியா சார்பில் வில்வித்தையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தீபிகா குமாரி மற்றும் அடானு தாஸ் தம்பதி பங்கேற்க உள்ளது. இந்தியா சார்பில் ஒரே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இரண்டாவது இந்திய கணவன் மனைவி ஜோடி என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர். இந்தியா சார்பில் ஒரே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய தம்பதி யார் தெரியுமா?


தீபிகா-அடானு:


இந்திய வில்வித்தையில் மிகவும் முக்கியமான இருவர் என்றால் அது தீபிகா குமாரி மற்றும் அடானு தாஸ்தான். இவர்கள் இருவரும் 2008-ஆம் ஆண்டு முதல் ஒன்றாக வில்வித்தை பயிற்சி செய்து வருகின்றனர். தொடக்கத்தில் தீபிகாவுடன் அடானு தாஸ் பேசுவதற்கே தயங்கியுள்ளார். ஏனென்றால் அவருக்கு அவ்வளவு தெளிவாக இந்தி தெரியாது. அதன்பின்னர் படிப் படியாக பேச தொடங்கிய இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. வழக்கம் போல் மோதலில் ஆரம்பித்த இவர்களின் உறவு பின்னர் காதலாக மாறியது. 2017ஆம் ஆண்டு முதல் இருவரும் காதல் வயப்பட்டு காதலித்து வந்துள்ளனர். 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு தங்களுடைய திருமணம் நடைபெற வேண்டும் என்று இவர் முடிவு செய்தனர். 




ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை. இதன் காரணமாக இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு காதலர்களாக செல்ல இருந்த இவர்கள் தற்போது கணவன்-மனைவியாக சென்றுள்ளனர். தீபிகா குமாரிக்கு இது மூன்றாவது ஒலிம்பிக் போட்டியாகும். அடானு தாஸிற்கு இது இரண்டாவது ஒலிம்பிக் போட்டியாகும். 


வேஸ்-ஜெனிஃபர் பயஸ்:


இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் தம்பதி வேஸ்-ஜெனிஃபர் பயஸ் ஜோடிதான். இந்திய டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸின் தாய்-தந்தையான இவர்கள் 1972ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தம்பதிகளாக பங்கேற்றனர். வேஸ் பயஸ் இந்திய ஹாக்கி அணி சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அவருடைய மனைவி ஜெனிஃபர் பயஸ் இந்திய மகளிர் கூடைப்பந்து அணி சார்பில் அதே ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றார். இவர்களின் மகன் லியாண்டர் பயஸூம் நான்கு முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று 1996ஆம் ஆண்டு ஒரு வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளார். 




இந்த ஜோடி பங்கேற்று 49 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக இந்தியா சார்பில் திருமணமான தம்பதி பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: இன்னும் 4 நாட்களில் ஒலிம்பிக்... 9 தங்கம்.. 7 வெள்ளி.. 12 வெண்கலம்.. இது இந்தியாவின் கணக்கு!