டோக்கியோ ஒலிம்பிக் தொடங்க இன்னும் 6 நாட்களே உள்ளது. ஒலிம்பிக் டென்னிஸ் உலகில் நேற்று இந்தியாவிற்கு ஒரு நல்ல செய்தி கிடைத்தது. டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நகலுக்கு பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்மூலம் ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணாவுடன் சுமித் நகல் இணைந்து விளையாடும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது. எனினும் இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை. இந்தச் சூழலில் மகளிர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-அன்கிதா ரெய்னா ஜோடி தகுதி பெற்றுள்ளது. இதன்மூலம் சானியா மிர்சா தன்னுடைய 4ஆவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார். 


இந்தியா சார்பில் இதற்கு முன்பாக தடகள வீராங்கனை பி.டி.உஷா (1980,1984,1988,1996) ஆகிய நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதேபோல் இம்முறை சானியா மிர்சாவை போல் வட்டு எறிதல் வீராங்கனை சீமா புனியா தன்னுடைய 4ஆவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார். சீமா புனியா (2004,2012,2016) ஆகிய மூன்று ஒலிம்பிக் தொடரில் பங்கேற்று உள்ளார். 


இந்நிலையில் சானியா மிர்சாவின் கடந்த கால ஒலிம்பிக் செயல்பாடுகள் எப்படி இருந்தது?


2008 ஒலிம்பிக்:




2008ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கு சானியா மிர்சா தகுதி பெற்றார். இதில் மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவிற்கு அவர் தகுதி பெற்று இருந்தார். இதில் சுனிதா ராவ் உடன் மகளிர் இரட்டையர் பிரிவில் பங்கேற்று முதல் சுற்றுடன் வெளியேறினார். அதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவில் காயம் காரணமாக முதல் சுற்றிலேயே வெளியேறினார். தன்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டியில் 20 வயதான சானியா மிர்சா சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் சற்று ஏமாற்றம் அளித்தார். 


2012 ஒலிம்பிக்:




2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சானியா மிர்சா இரண்டாவது முறையாக தகுதி பெற்றார். இந்த முறை கலப்பு இரட்டையர் பிரிவில் அவர் ரோகன் போபண்ணா உடன் விளையாட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இந்திய டென்னிஸ் சங்கம் அவரை லியாண்டர் பயஸ் உடன் இணைந்து விளையாட அறிவித்தது. மகளிர் இரட்டையர் பிரிவில் ருஷ்மி சக்ரவர்த்தியுடன் இணைந்து சானியா மிர்சா மீண்டும் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ் உடன் விளையாடிய சானியா முதல் சுற்றில் வெற்றி பெற்றார். எனினும் இந்த ஜோடி இரண்டாவது சுற்றில் பெலாரஸ் நாட்டு இணையிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. எனவே தன்னுடைய இரண்டாவது ஒலிம்பிக் தொடரிலும் பதக்கம் வெல்லும் வாய்ப்பை சானியா மிர்சா தவறவிட்டார். 


2016 ஒலிம்பிக்:




2016ஆம் ஆண்டு பிரேசில் தலைநகர் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கு மூன்றாவது முறையாக சானியா மிர்சா தகுதி பெற்றார். இம்முறை கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, போபண்ணா ஜோடி களமிறங்கியது. இந்த ஜோடி ஒலிம்பிக் தொடர் தொடக்கம் முதல் அசத்தியது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்த ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. அரையிறுதியில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது. அதன்பின்னர் நடைபெற்ற வெண்கலப்பதக்க போட்டியிலும் சானியா-போபண்ணா ஜோடி தோல்வி அடைந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா-பிரார்தனா ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது. 




கடைசியாக 1996ஆம் ஆண்டு அட்லான்டா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதன்பின்னர் இந்திய ஒலிம்பிக் டென்னிஸ்   வரலாற்றில் இதுவரை பதக்கம் வெல்லவில்லை. எனவே 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் சானியா மிர்சா 25 ஆண்டு கால பதக்க கனவை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க:7 நாட்களில் டோக்கியோ ஒலிம்பிக்: 40 ஆண்டுகால பதக்க கனவை வெல்லுமா இந்தியா ஹாக்கி அணிகள்?