டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 7 நாட்கள் உள்ளன. இதில் இந்தியா பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் விளையாட்டுகளில் ஒன்று ஹாக்கி. இம்முறை 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தற்போதைய ஃபார்ம் சிறப்பாக இருப்பதே அதற்கு முக்கிய காரணம். ஹாக்கி விளையாட்டில் ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தங்கம் வென்ற அணி என்ற பெருமையை இந்தியா தன் வசம் வைத்துள்ளது. அத்துடன் ஹாக்கி விளையாட்டில் இதுவரை 8 தங்கம், 1 ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தமாக இந்தியா 11 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளது.
ஒலிம்பிக் வரலாற்றில் 1928ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. கடைசியாக 8ஆவது தங்கப்பதக்கத்தை 1980ஆம் ஆண்டு மாஸ்கோவில் வென்றது. அதன்பின்னர் 40 ஆண்டுகளாக இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிகில் பதக்கம் வெல்லவில்லை. இந்தச் சூழலில் தற்போது உலக தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ள இந்திய ஆடவர் அணி இம்முறை நிச்சயம் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடவர் ஹாக்கி டோக்கியோ ஒலிம்பிக் அட்டவணை:
மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், அர்ஜென்டினா, ஸ்பெயின் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணியின் போட்டிகள் வருமாறு:
- 24.07.2021:- இந்தியாvs நியூசிலாந்து(காலை 6.30 மணி)
- 25.07.2021:- இந்தியா vs ஆஸ்திரேலியா(மதியம் 3.00 மணி)
- 27.07.2021:-இந்தியா vs ஸ்பெயின்(காலை 6.30 மணி)
- 29.07.2021:- இந்தியா vs அர்ஜென்டினா(காலை 6.00 மணி)
- 30.07.2021:-இந்தியா vs ஜப்பான்(மதியம் 3.00 மணி)
குரூப் போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெறும். காலிறுதிச் சுற்று போட்டிகளில் ஆகஸ்ட் 1ஆம் தேதியும், அரையிறுதிச் சுற்று ஆகஸ்ட் 3ஆம் தேதியும் நடைபெறும். இறுதிப் போட்டி ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.
மகளிர் ஹாக்கி அணி:
இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக 1980-ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றது. அப்போது தான் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் ஹாக்கி அறிமுகம் செய்யப்பட்டது. அந்த முறை இந்திய மகளிர் அணி 4ஆவது இடத்தைப் பிடித்தது. அது தான் தற்போது வரை இந்திய மகளிர் ஹாக்கி அணியின் சிறந்த செயல்பாடாக உள்ளது.
அதன்பின்னர் 36ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய ஹாக்கி அணி தகுதி பெற்றது. அதில் சுஷிலா சானு தலைமையிலான இந்திய மகளிர் அணி குரூப் போட்டிகளிலேயே தோல்வி அடைந்து வெளியேறியது. தற்போது மூன்றாவது முறையாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது. உலக ஹாக்கி தரவரிசையில் இந்திய மகளிர் அணி தற்போது 9ஆவது இடத்தில் உள்ளது. ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஜெர்மனி, பிரிட்டன், ஐயர்லாந்து, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் இந்தியாவுடன் இடம்பெற்றுள்ளன. இந்திய மகளிர் அணியின் போட்டிகள் வருமாறு:
- 24.07.2021:- இந்தியாvs நெதர்லாந்து(மாலை 5.15 மணி)
- 26.07.2021:- இந்தியா vs ஜெர்மனி (மாலை 5.45 மணி)
- 28.07.2021:-இந்தியா vs பிரிட்டன்(காலை 6.30 மணி)
- 30..07.2021:- இந்தியா vs ஐயர்லாந்து (காலை 8.15 மணி)
- 31.07.2021:-இந்தியா vs தென்னாப்பிரிக்கா (காலை 8.45 மணி)
குரூப் போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெறும். காலிறுதிச் சுற்று போட்டிகளில் ஆகஸ்ட் 2-ஆம் தேதியும், அரையிறுதிச் சுற்று ஆகஸ்ட் 4ஆம் தேதியும் நடைபெறும். இறுதிப் போட்டி ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: 8 நாட்களில் டோக்கியோ ஒலிம்பிக்: குத்துச்சண்டை போட்டியில் இந்திய அணி மீது எதிர்பார்ப்பு!