டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் இந்தியாவின் தீபிகா குமாரி 9ஆவது இடத்தை பிடித்தார். அதேபோல் ஆடவர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் 31ஆவது இடத்தை பிடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அடானு தாஸ் 35ஆவது இடத்தை பிடித்தார். இதனால் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா குமாரி யாருடன் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்தது. இதில் இந்திய வில்வித்தை சங்கம் டோக்கியோ தகுதிச் சுற்றில் 31ஆவது இடத்தைப் பிடித்த பிரவீன் ஜாதவ் உடன் தீபிகா குமாரியை ஜோடி சேர்த்தது.  முதல் சுற்றில் இந்த இணை சீன தைபே அணியை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 


 






காலிறுதிச் சுற்றில் இந்த ஜோடி தென்கொரியாவின் அன் சன் மற்றும் கிம் ஜே ஆகியோரை எதிர்த்து இந்திய ஜோடி விளையாடியது. இதில்  தொடக்கம் முதலே தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் மிகவும் தடுமாறினர். இதனால் முதல் இரண்டு செட்களை தென்கொரியா எளிதாக வென்றது. அதன்பின்னர் மூன்றாவது செட்டில் இந்திய ஜோடி சற்று திரும்பி வந்தது. அதை 2 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இதனால் கடைசி செட்டை வெற்றி பெற்றால் ஷூட் ஆஃப் முறைக்கு செல்லும் வாய்ப்பு இருந்தது. எனினும் கடைசி செட்டில் பிரவீன் ஜாதவ் மற்றும் தீபிகா சொதப்பினார்கள். இதனால் 5-3 என்ற கணக்கில் தென்கொரியா அணி இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. காலிறுதிச் சுற்றில் தோல்வி அடைந்ததால் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது. 


 






அதேபோல் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தற்போது குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் இந்தியாவின் சாய் பிரணீத் குரூப் டி பிரிவில் இஸ்ரேல் நாட்டின் ஸில்பெர்மெனை எதிர்த்து விளையாடினார். இதில் 21-17,21-15 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார். இதன் காரணமாக இன்னும் மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் அவர் நிச்சயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு சாய் பிரணீத் தள்ளப்பட்டுள்ளார். 


மேலும் படிக்க: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டிக்கு சவுரப் சௌதரி தகுதி !