டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் வீசி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். தன்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள 23 வயதான இவர், இந்தியாவிற்காக தடகளத்தில் தனது முதல் தங்கத்தை வென்று அசத்தியுள்ளார். பெரிய போட்டிகளில் தங்கம் வெல்வது ஒன்றும் நீரஜ் சோப்ராவிற்கு புதிதல்ல. அவர் இதற்கு முன்பாக பல தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 


உதாரணமாக, 2016 உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் தங்கம், 2016ம் ஆண்டு தெற்காசிய போட்டியில் தங்கம், 2017ம் ஆண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தங்கம், 2018ம் ஆண்டு காமென்வெல்த் போட்டியில் தங்கம், 2018ம் ஆண்டு ஆசிய போட்டியில் தங்கம் எனப் பல தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். அந்த வரிசையில் தற்போது ஒலிம்பிக் தங்கமும் இணைந்துள்ளது.  இத்தனை முறை தங்கம் வென்றாலும் அவருடைய ஸ்டைல் எப்போதும் களத்தில் கூலாக இருப்பது தான். 




ஒவ்வொரு பெரிய போட்டிக்கு முன்பாகவும் வீரர்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பு வீரர்களுக்கு பொதுவாக பெரிய நெருக்கடியை கொடுக்கும். ஆனால், நீரஜ் சோப்ராவை பொறுத்தவரை அவருக்கு ஒரே நெருக்கடி அவருடைய குடும்பம் நேரில் வந்து போட்டியை பார்ப்பது மட்டும் தான். மற்றபடி 130 கோடி இந்திய மக்களின் எதிர்பார்ப்பு அவருக்கு பெரிய நெருக்கடியாக இருந்ததே இல்லை. ஏனென்றால் இதுகுறித்து அவரே ஒரு முறை ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். 


அதில், "களத்தில் ஈட்டி எறியும் போது நான் வேறு ஒரு மனிதராக இருப்பேன். ஆனால், வீட்டில் இருக்கும் போது நான் வேறு மாதிரி இருப்பேன். எனவே தான் என்னுடைய போட்டியை நேரில் காண என்னுடைய குடும்பத்தினர் யாரையும் வர சொல்ல மாட்டேன். அவர்கள் நேரில் வந்து போட்டியை பார்க்கிறார்கள் என்றால், எனக்குள் ஒரு பதட்டம் வந்துவிடும். ஆகவே, அவர்களை இதுவரை நான் பங்கேற்கும் போட்டியை பார்க்க நான் அழைத்ததே இல்லை " எனக் கூறியிருந்தார். 


 






அதேமாதிரி தான் இந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் எந்த நெருக்கடியும் இல்லாமல் அவர் தகுதிச் சுற்றிற்கு வந்தார். முதல் வாய்ப்பில் தகுதி தூரத்தை தாண்டினார். வேகமாக தன்னுடைய பையை எடுத்து கொண்டு சென்றார். பின்பு, இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் வந்தார். முதல் வாய்ப்பில் 87.03 மீட்டர் தூரம் வீசினார். அதன்பின்னர் இரண்டாவது வாய்ப்பில் 87.58 மீட்டர் தூரம் வீசினார். அந்த த்ரோவின் போது அவர் கையில் இருந்து ஈட்டி சென்றவுடனே அவருக்கு தெரிந்தது அது பெரிய தூரம் செல்லும் என்று. அந்த அளவிற்கு தன்னுடைய த்ரோவில் கவனம் செலுத்து பவராக அவர் இருக்கிறார். 


அதேபோல் 23 வயதில் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் சிறப்பாக தன்னுடைய விளையாட்டில் இருக்கும் நீரஜ் சோப்ரா ஒரு மிகப்பெரிய ஜாம்பவானாக வலம் வருவார் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. 


மேலும் படிக்க:ஒரே எறியில் உலக நாடுகளை நடுங்க வைத்த நீரஜ் சோப்ரா: இந்த ஈட்டிக்கு போட்டி யாரு?