டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான நீரஜ் சோப்ரா பங்கேற்றார். தகுதிச் சுற்றில்  முதல் வாய்ப்பிலேயே, 86.65 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். தனது முதல் ஒலிம்பிக் தொடரிலேயே, சிறப்பாக விளையாடி இருக்கும் நீரஜ் சோப்ரா, இறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியிருந்தார். 


இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இதில் தன்னுடைய முதல் வாய்ப்பில் அவர் 87.03 மீட்டர் தூரம் வீசினார். அதன்பின்னர் இரண்டாவது வாய்ப்பில் 87.58 மீட்டர் தூரம் வீசி அசத்தினார். மூன்றாவது வாய்ப்பில் 76.79 மீட்டர் வீசினார். நான்காவது,ஐந்தாவது வாய்ப்பில் ஃபவுல் செய்தார். எனினும் தன்னுடைய இரண்டாவது வாய்ப்பில் அவர் வீசிய 87.58 மீட்டர் தூரம் மூலம் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தார். 


இதன் மூலம் தடகள போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. கடைசியாக 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் அபினவ் பிந்த்ரா இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று இருந்தார். அதன்பின்னர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வென்ற இரண்டாவது நபராக நீரஜ் சோப்ரா சாதனைப் படைத்துள்ளார். மேலும் தடகளத்தில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இது தவிர  ஒலிம்பிக் போட்டியில்  இந்தியாவிற்கு ஹாக்கியில் 8 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக முதல் நாளில் 3000 மீட்டர் ஸ்டீப்புள் சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் பங்கேற்றார்.பந்தைய தூரத்தை 8.18.12 என்ற நேரத்தில் முடித்தார். அத்துடன் புதிய தேசிய சாதனையை படைத்தார். அவர் தன்னுடைய முந்தைய தேசிய சாதனையான 8.20.20 என்ற நேரத்தை முறியடித்து புதிய சாதனையை படைத்தார்.  ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டம்  இந்தியாவின் எம்.பி.ஜபீர்  பந்தைய தூரத்தை 50.77  நேரத்தில் கடந்து  7ஆவது இடத்தை பிடித்தார். தன்னுடைய ஹீட்ஸ் சுற்றில் கடைசி இடத்தை பிடித்ததன் மூலம் முதல் சுற்றுடன் எம்.பி.ஜபீர் வெளியேறி  அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார். 


அதன்பின்னர் நடைபெற்ற 4*400 மீட்டர் லப்பு ரிலேவில் இந்திய அணி தன்னுடைய ஹீட்ஸ் பிரிவில் கடைசி இடத்தை பிடித்தது. இதனால் அந்த அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அதேபோல் வட்டு எறிதலில் குரூப் ஏ பிரிவில் சீமா புனியா பங்கேற்றார்.  அவர் தன்னுடைய முதல் வாய்ப்பில் ஃபவுல் செய்தார். இரண்டாவது வாய்ப்பில் 60.57 மீட்டர் தூரம் வீசினார். அதன்பின்னர் மூன்றாவது வாய்ப்பில் 58.93 மீட்டர் தூரம் வீசினார். இதனால் நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற சீமா புனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.


மேலும் படிக்க:  ஒலிம்பிக் மல்யுத்தம்: வெண்கலம் வென்று பஜ்ரங் புனியா அசத்தல் !