டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்கும் முக்கிய விளையாட்டுகளில் ஒன்று மல்யுத்தம். அதில் நேற்று நடைபெற்ற மல்யுத்த முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி போட்டியில், ஈரான் நாட்டைச் சேர்ந்த கியாசி செக்க மொர்டசாவை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில், 1- 2 என்ற புள்ளிக்கணக்கில் அவர் போட்டியை வென்று, அரை இறுதிக்கு முன்னேறினார். அரையிறுதிப் போட்டியில் 3 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அஜர்பெய்ஜான் நாட்டைச் சேர்ந்த ஹாஜி அலியேவை எதிர்த்து பஜ்ரங் புனியா சண்டை செய்தார். இதில் 11-5 என்ற கணக்கில் பஜ்ரங் புனியா தோல்வி அடைந்தார். இதனால் அவர் வெண்கலப்பதக்க போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
இந்நிலையில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் பஜ்ரங் புனியா இன்று விளையாடினார். அதில் கஜகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நியாஸ்பெகோவை எதிர்த்து களம் கண்டார். இதில் முதல் ரவுண்டில் சிறப்பாக விளையாடிய பஜ்ரங் புனியா 2-0 என முன்னிலை பெற்றார். அதன்பின்னர் இரண்டாவது ரவுண்டிலும் பஜ்ரங் புனியா சிறப்பாக செயல்பட்டார். இறுதியில் இந்தப் போட்டியை வென்று இந்தியாவிற்கு 4ஆவது வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார். டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு இது இரண்டாவது பதக்கம் ஆகும்.
முன்னதாக ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரரை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் அவர் தோல்வி அடைந்து மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு இரண்டாவது வெள்ளிப்பதக்கத்தை வென்றார். நேற்று காலை நடைபெற்ற மகளிர் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் காலிறுதிச் சுற்றில் பெலாரஷ்ய வீராங்கனை வனிசாவிடம் 3-9 என்ற கணக்கில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தார். 53 கிலோ எடைப்பிரிவில் முதல்நிலை வீராங்கனையாக இருந்த வினேஷ் போகட் காலிறுதியில் தோல்வி அடைந்தது பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது.பெலாரஷ்ய வீராங்கனை அரையிறுதியில் சீன வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இதனால் வினேஷ் போகட் ரெபிசாஜ் ரவுண்டிற்கு செல்லும் வாய்ப்பு இல்லை. இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாமல் வினேஷ் போகட் வெளியேறி உள்ளார்.
மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் ரெபிசாஜ் ரவுண்டில் பங்கேற்றார். அவர் ரஷ்யாவின் வெலேரியாவிடம் 1-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கத்திற்கு போட்டியிடம் வாய்ப்பை இழந்தார். அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறினார். ஆடவர் 87 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா சான் மெரினோ வீரரிடம் வெண்கலப்பதக்க போட்டியில் தோல்வி அடைந்தார்.
மேலும் படிக்க: நான்காம் இடம் கூட... நாடறியச் செய்யும்! அந்த வரிசையில் இத்தனை பேரா...?