டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் கோல்ஃப் போட்டிகளின் கடைசி சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அதிதி அசோக் தொடக்கத்தில் இரண்டாவது இடத்தில் இருந்தார். அதன்பின்னர் கடைசியில் 18 குழிகளின் முடிவில் நான்காவது இடம் பிடித்து நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் கடந்த நான்கு நாட்களாக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவருடைய ஆட்டத்தை பார்த்த பலருக்கும் கோல்ஃப் விளையாட்டின் விதிமுறைகள் மற்றும் ஸ்கோர் முறை எப்படி என்று தெரியாமல் போனது. 


இந்நிலையில் கோல்ஃப் விளையாட்டில் ஸ்கோர் எப்படி செய்யப்படுகிறது? கோல்ஃப் விளையாட்டின் விதிமுறைகள் என்னென்ன?


பார் 3,4,5 குழிகள் என்றால் என்ன?


கோல்ஃப் விளையாட்டில் பார் 3(par 3), பார் 4(par 4), பார் 5(par 5) குழிகள் இருக்கும். இந்த குழிகளுக்குள் பந்தை செலுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் முயற்சி செய்வார்கள். உதாரணமாக பார் 3 குழி என்றால் ஒரு வீரர் மூன்று முயற்சியில் பந்தை குழிக்குள் விழ வைக்க வேண்டும். அதேபோல் பார் 4 குழி என்றால் அதில் பந்தை நான்காவது முயற்சிக்குள் குழிக்குள் தள்ளிவிட வேண்டும்.  பார் 5 குழி என்றால் 5ஆவது முயற்சிக்குள் பந்தை குழிக்குள் தள்ள வேண்டும். 


பெர்டி(Birdie), ஈகிள்(Eagle),போகி (Bogey),டபிள் போகி (Double Bogey) என்றால் என்ன?


பெர்டி: என்றால் பார் 3 குழி என்றால் பந்தை 2ஆவது முயற்சியிலேயே குழிக்குள் அடித்து விட்டால் தரப்படும். அதேபோல் பார் 4 குழி என்றால் 3ஆவது முயற்சியிலும், பார் 5 குழி என்றால் 4ஆவது முயற்சியிலும் தள்ளுவது. 


ஈகிள் என்றால் பார் 3 முதல் முயற்சியில் உள்ளே தள்ளுவது, பார் 4 குழி என்றால் 2ஆவது முயற்சியில் தள்ளுவது, பார் 5 குழி என்றால் 3ஆவது முயற்சியில் தள்ளுவதாகும். 


கோல்ஃப் விளையாட்டில் ஒரு குழியில் பந்தை தள்ளுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள முயற்சிகளை தாண்டி பந்தை குழிக்குள் தள்ளும் போது போகி மற்றும் டபிள் போகி ஆகிய இரண்டும் வரும். இந்த இரண்டை ஒரு வீரர் எடுக்கும் பட்சத்தில் அவருடைய ஸ்கோர் குறைக்கப்படும். 




போகி என்றால் பார்3 குழிக்குள் 4ஆவது முயற்சியில் பந்தை உள்ளே தள்ளுவது, பார் 4 குழி என்றால் 5ஆவது முயற்சியில் பந்தை உள்ளே தள்ளுவது, பார் 5 குழி என்றால் பந்தை 6ஆவது முயற்சியில் குழிக்குள் தள்ளுவதாகும். 


டபிள் போகி என்றால் பார்3 குழிக்குள் 5ஆவது முயற்சியில் பந்தை உள்ளே தள்ளுவது, பார் 4 குழி என்றால் 6ஆவது முயற்சியில் பந்தை உள்ளே தள்ளுவது, பார் 5 குழி என்றால் பந்தை 7ஆவது முயற்சியில் குழிக்குள் தள்ளுவதாகும். 


கோல்ஃப் விளையாட்டில் ஸ்கோர் எப்படி தீர்மானிக்கப்படும்?


கோல்ஃப் விளையாட்டில் ஒரு ரவுண்டிற்கு எத்தனை குழிகள் என்பதை போட்டி அமைப்பாளர்கள் தீர்மானிப்பார்கள். அந்த குழிகளுக்கு ஏற்றவாறு ஒரு சுற்றில் ஒரு வீரருக்கான அதிகபட்ச முயற்சி தேர்வு செய்யப்படும். அதாவது ஒரு கோல்ஃப் போட்டியில் 15 குழிகள் இருக்கும் பட்சத்தில் 61 முயற்சிகள் தான் அதிகபட்ச முயற்சி என்று போட்டியில் நிர்ணயிக்கப்பட்டால். ஒவ்வொரு வீரரும் 61 முயற்சிக்குள் 15 குழிகளை முடித்தால் வெற்றி பெறும் வாய்ப்பை பெறுவார்கள். அதற்கு மேலே சென்றால் அவருடைய வெற்றி வாய்ப்பு குறையும். 


டோக்கியோ ஒலிம்பிக் கோல்ஃப் ஸ்கோர் எப்படி இருந்தது?


இயல்பான கோல்ஃப் எல்பிஜிஏ டூர் போட்டிகளில் 6 சுற்றுகள் நடைபெறும். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 4 சுற்றுகள் என தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் ஒரு சுற்றுக்கு 18 குழிகள் அத்துடன் அதிகபட்ச முயற்சி 71 என தீர்மானிக்கப்பட்டது. ஆகவே ஒவ்வொரு சுற்றிலும் 71 முயற்சிக்கு முன்பாக ஒரு 18 குழிகளை முடிப்பவர்களுக்கு பதக்க வாய்ப்பு சிறப்பாக இருக்கும்.  உதாரணமாக ஒருவர் பார் 3 குழியை 3 முயற்சியில் முடித்தால் அவருக்கு ஸ்கோர் எதுவும் குறையாது. ஆனால் குறைவான முயற்சியிலேயோ அல்லது அதிகமான முயற்சியிலேயோ முடித்தால் ஸ்கோரில் மாற்றம் ஏற்படும். அது தான் அந்த பார் அண்டர் ஸ்கோராக வரும். 




இப்படி பார்க்கும் போது மொத்தமாக நான்கு சுற்றையும் சேர்த்து 72 குழிகளை முடிக்க ஒரு வீராங்கனைக்கு 284 முயற்சிகள் இருந்தது. அதில் இந்தியாவின் அதிதி மொத்தமாக 269 முயற்சிகளை எடுத்து கொண்டார். இதனால் (284-269=15 ) அவருடைய ஸ்கோர் பார் -15 என வந்தது. அதாவது அவர் 15 முயற்சிகள் குறைவாக குழிகளை முடித்திருந்தார். இந்தப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நெல்லி கோட்ரா 17 முயற்சிகள் குறைவாக குழிகளை முடித்திருந்தார். வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் வென்ற வீராங்கனைகள் 16 முயற்சிகள் குறைவாக முடித்து பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: இந்தியர்களை கோல்ஃப் பார்க்க வைத்த அதிதி அசோக் யார்? ஒலிம்பிக் அழைத்து வந்த அந்த ஒரு டூர்!