டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் கோல்ஃப் போட்டிகளின் கடைசி சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அதிதி அசோக் தொடக்கத்தில் இரண்டாவது இடத்தில் இருந்தார். அதன்பின்னர் கடைசியில் 18 குழிகளின் முடிவில் நான்காவது இடம் பிடித்து நுலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் கடந்த நான்கு நாட்களாக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 


இந்நிலையில் யார் இந்த அதிதி அசோக்? எப்படி கோல்ஃப் விளையாட்டிற்குள் வந்தார்?


சிறுவயதில் கோல்ஃப்:


கர்நாடக மாநிலம் பெங்களூருவை பூர்வீகமாக கொண்டவர் அதிதி அசோக். இவர் தன்னுடைய சிறுவயதில் குடும்பத்துடன் பொழுதுபோக்கிற்காக கோல்ஃப் விளையாட சென்றுள்ளார். அப்போது பந்தை அடித்து குழிக்குள் தள்ளுவதில் இவருக்கும் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதை கண்ட அவருடைய பெற்றோர் கோல்ஃப் பயிற்சியில் அவரை சேர்த்துள்ளனர். தன்னுடைய 5 வயது முதல் இவர் கோல்ஃப் விளையாட்டை கற்று வருகிறார். முதல் முறையாக 18 குழிகள் கொண்ட கோல்ஃப் விளையாட்டை அவர் தன்னுடைய 6 வயதிலேயே விளையாடி உள்ளார். 


முதல் பட்டம்:




பெங்களூருவில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மகளிர் கோல்ஃப் சங்கத்தின் ப்ரோ போட்டியை 13 வயதான அதிதி அசோக்  வென்று சாதனைப் படைத்தார். அதன்பின்னர் பல போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார். 2016ஆம் ஆண்டு இந்தியன் ஓபன் கோல்ஃப் போட்டியை 213 பார் அண்டர் 3  என்ற ஸ்கோர் கணக்கில் வென்று அசத்தினார். அதே ஆண்டு சர்வதேச கோல்ஃப் போட்டிகளுக்கு தகுதி பெறும் போட்டிக்கு அதிதி தேர்வாகி அசத்தியிருந்தார். அந்த தகுதியை மிகவும் குறைவான வயதில் பெற்ற வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்திருந்தார். 


ரியோ ஒலிம்பிக்:


2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் 112 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோல்ஃப் போட்டிகள் சேர்க்கப்பட்டன. எனவே அதற்கு தகுதி பெற வேண்டும் என்று அவர் முழு மூச்சாக செயல்பட்டார். அதன்படி ரியோ ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற அவர் முதல் இரண்டு நாட்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின்னர் இறுதியில் சற்று பின் தங்கிய அதிதி அசோக் 41ஆவது இடத்தை பிடித்தார். இந்த ஒலிம்பிக் தொடர் முழுவதும் தன்னுடன் கிட் பேக் மற்றும் கோல்ஃப் ஸ்டிகை தூக்க தன்னுடைய தந்தையை கேடிங்கிற்கு வைத்திருந்தார். அதிதியின் கோல்ஃப் வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது அவருடைய தாய் மற்றும் தந்தை தான். 




2020 டோக்கியோ ஒலிம்பிக்:


2019ஆம் ஆண்டு நடைபெற்ற 22 எல்பிஜிஏ கோல்ஃப் போட்டிகளில் 13 போட்டிகளுக்கு இவர் தகுதிப் பெற்று இருந்தார். அத்துடன் இரண்டு தொடர்களில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியிருந்தார். உலக தரவரிசையில் 200ஆவது இடத்தையும் பிடித்திருந்தார். அத்துடன் ஒலிம்பிக் தகுதி பெறும் வரிசையில் 45ஆவது இடத்தில் இருந்தார். இதனால் அவருக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. 


இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தன்னுடன் கேடிங் செய்ய தன் தாயை அதிதி அசோக் அழைத்து வந்திருந்தார். சென்ற ஒலிம்பிக் தொடரை போல் இம்முறையும் முதல் இரண்டு நாட்கள் சிறப்பாக அமைந்தது. அதன்பின்னர் கடைசி இரண்டு நாட்களும் சிறப்பாக. கடைசி நாளில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 15ஆவது குழி வரை பதக்க வாய்ப்புடன் இருந்தார்.




கடைசி குழியிலும் ஒரு பெர்டி எடுத்திருந்தால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் அதில் சற்று தவறிய அதிதி அசோக் நுலிழையில் பதக்கத்தை தவறவிட்டார்.  அவர் ஒலிம்பிக் பதக்கத்தை தவறவிட்டிருந்தாலும் அனைத்து இந்தியர்களின் மனதையும் வென்றுவிட்டார். ஒட்டு மொத்த இந்தியாவும் கோல்ஃப் விளையாட்டு என்ன என்று தெரியாமல் இருந்தாலும் இன்று காலை முதல் அவருக்காக வேண்டி ஆதரவு செய்தது ஒரு மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க:கோல்ஃப் ஒலிம்பிக்: நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்த அதிதி அசோக்; இந்தியாவுக்கு 4வது இடம்!