டோக்கியோ ஒலிம்பிக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றது. இன்று, கோல்ஃப், மல்யுத்தம், ஈட்டி எறிதல் என இந்தியா பதக்கம் வெல்வதற்கு வாய்ப்புகள் இருக்க கூடிய போட்டிகள் இன்று நடைபெறுகின்றன. இந்த வரிசையில், இந்த ஒலிம்பிக்கின் ஆச்சர்யமாக இந்தியாவின் அதிதி அசோக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 


சர்வதேச கோல்ஃப் தரவரிசை பட்டியலில் 200வது இடத்தில் இருக்கும் அவர், இப்போது ஒலிம்பிக் தொடரில் தொடக்கம் முதலே கோல்ஃப் போட்டிகளில் டாப் இடத்தில் நிலைப்பெற்று வந்தார். முதல் ஐந்து இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டிருந்த அதிதி, இன்று கடைசி சுற்று போட்டிகளில் விளையாடினார். இந்தியாவே கோல்ஃப் பார்க்க தொடங்கியுள்ளது, கோல்ஃப் விளையாட்டின் ஆட்ட நுணுக்கங்களை தெரிந்து கொண்டு அதிதியை உற்சாகப்படுத்தி வந்தது.






இந்நிலையில், இன்றைய போட்டி முடிவில் நான்காவது இடத்தில் நிறைவு செய்த அதிதி, நூலிழையில் பதக்கம் வெல்ல வாய்ப்பை இழந்துள்ளார். இந்தியா சார்பில் ஒலிம்பிக் கோல்ஃப் போட்டியில்  அதிதி அசோக் மற்றும் திக்‌ஷா தாகர் ஆகிய 2 பேர் பங்கேற்றிருந்தனர். மொத்தம் 4 சுற்றுகள் நடைபெற்றன. ஒவ்வொரு சுற்றிலும், 18 குழிகளில் பந்தை விழச்செய்ய வேண்டும். மொத்தம் 72 குழிகளில் பந்துகள் விழ வேண்டும். ஒவ்வொரு குழியில் பந்தை விழச் செய்யவும், 4 வாய்ப்புகள் வழங்கப்படும். 






போட்டியில் பங்கேற்றிருக்கும் வீராங்கனைகளில், குறைந்த வாய்ப்புகளில் யார் குழிகளில் பந்துகளை விழச் செய்கிறார்களோ, அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். இப்படி, குறைந்த வாய்ப்புகளில் பந்துகளை விழச் செய்யும் வீராங்கனைகள், தர வரிசை பட்டியலில் இடம் பெறுவர். இந்நிலையில்தான், அதிதி நான்காவது இடத்தில் இன்று நிறைவு செய்துள்ளார். பதக்கம் கிடைத்ததோ இல்லையோ, இந்திய மக்களை கோல்ஃப் பார்க்க வைத்திருக்கிறார் அதிதி. மற்ற விளையாட்டுகளைப் போல, கோல்ஃப் விளையாட்டிலும் கடைசி நிமிட பரபரப்புகள் இந்த போட்டியிலும் இருந்தது. இது தொடக்கமே, அடுத்த முறை நிச்சயம் பதக்கம் வெல்ல வாழ்த்துகள் அதிதி!