ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதியில் பெல்ஜியத்திடம் 5-2 என்ற கணக்கில் போராடி தோற்றது. இருப்பினும், வெண்கலப் பக்கத்திற்கான போட்டியில் 5-4 என்ற கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்று 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கியின் பதக்க தாகத்தை தணித்தது,


இதையடுத்து, பதக்கத்தை வென்ற மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், பஞ்சாப் மாநில அரசு பதக்கம் வென்ற அணியில் இடம்பெற்ற அந்த மாநிலத்தைச் சேர்ந்த 8 வீரர்களுக்கு தலா ரூபாய் 1 கோடி பரிசு அளிப்பதாக அறிவித்துள்ளது.






இந்த நிலையில், பா.ஜ.க. எம்.பி.யும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில், 1983, 2007, 2011 உலக கோப்பைகளை மறந்துவிடுங்கள். ஹாக்கியில் பெற்ற இந்த பதக்கம் உலககோப்பைகளை விட உயர்ந்தது. இந்தியன் ஹாக்கி என்னுடைய பெருமிதம்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். அவரது பதிவிற்கு பலரும் இந்திய ஹாக்கிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர். சிலர், கவுதம் கம்பீரின் பதிவிற்கு கீழ், இந்த ஒப்பிடு தேவையில்லாதது. ஒவ்வொரு வெற்றியும் முக்கியத்துவம் வாய்ந்ததுது என்றும், கிரிக்கெட்டும், ஹாக்கியும் முக்கியமானதுதான் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.




இந்திய கிரிக்கெட் அணி கபில்தேவ் தலைமையில் முதன்முறையாக 1983ம் ஆண்டு உலகக்கோப்பையையும், 2007ம் ஆண்டு தோனி தலைமையில் டி20 முதல் உலகக்கோப்பையையும், 2011-ஆம் ஆண்டு தோனி தலைமையில் 50 ஓவர்கள் உலககோப்பையையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. அதில், 2007ம் ஆண்டு மற்றும் 2011ம் ஆண்டு உலகக்கோப்பை இந்திய அணியில் கவுதம் கம்பீர் ஆடியுள்ளார். குறிப்பாக, 2011-ஆம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியதற்கு கவுதம் கம்பீரின் நிதான ஆட்டம்தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. 


கவுதம் கம்பீர் 58 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 154 ரன்களும், 147 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 238 ரன்களும், 37 டி20 போட்டிகளில் ஆடி 932 ரன்களும், 154 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 218 ரன்களும் குவித்துள்ளார். அவரது தலைமையின்கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.