விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருது இனி, மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு முன்னர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பெயரில் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு வந்தது. இதனைத் தற்போது மேஜர் தயான்சந்த் பெயரில் மாற்றி பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் யார் இந்த தயான்சந்த்? எதற்காக இவருடைய பிறந்தநாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது?
கிரிக்கெட் உலகில் தாதா என்றால் அனைவருக்கும் தெரிந்தவர் சவுரவ் கங்குலி. ஆனால் ஹாக்கி உலகில் தாதா என்றால் அது நம் மேஜர் தயான்சந்த் தான். 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி அலாகாபாத்தில் பிறந்தவர் தயான்சந்த். இவருடைய தந்தை பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். அதனால் அவரைப் போல் சிறுவயது முதல் ராணுவத்தில் சேர்ந்து பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கும் இருந்தது. இதனால் தன்னுடைய 16 ஆவது வயதில் ராணுவத்தில் இணைந்தார். ராணுவத்தில் இணைந்தாலும் அவருடைய முதல் காதல் எப்போதும் ஹாக்கி விளையாட்டாகவே இருந்தது.
அந்த விளையாட்டை அவர் ராணுவத்தில் இருந்து கொண்டே தொடரவேண்டும் என்று நினைத்தார். 1922ஆம் ஆண்டு முதல் ராணுவத்தில் பல்வேறு ஹாக்கி போட்டிகளில் பங்கேற்றார். எப்போதும் அவருடைய சிந்தனை செயல் எல்லாமே ஹாக்கியை நோக்கியே இருந்தது. தன்னுடைய ராணுவ பணி முடிந்த பிறகு இரவில் நிலவு வெளிச்சத்திலும் தன்னுடைய ஹாக்கி பயிற்சியை செய்து கொண்டு இருப்பார். கையில் ஒரு ஹாக்கி ஸ்டிக் மற்றும் ஹாக்கி பந்து ஆகிய இரண்டும் இருந்தால் அவருக்கு அதுவே ஒரு சொர்க்கமாக அமைந்தது.
இந்திய ஹாக்கி அணியில் தயான்சந்த்:
1926ஆம் ஆண்டு இந்திய ராணுவ ஹாக்கி அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்தது. அப்போது அங்கு 18 ஹாக்கி போட்டிகளில் இந்திய ராணுவ அணி வென்றது. அந்தத் தொடரில் தயான்சந்த் தன்னுடைய ஹாக்கி வித்தையை காண்பித்தார். இதனால் அத்தொடரின் முடிவில் அவருக்கு பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் லான்ஸ் நாயக் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அத்துடன் பஞ்சாப் ரெஜிமெண்டில் இணைக்கப்பட்டார். 1928ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக ஹாக்கி இணைக்கப்பட்டது. அதற்கு இந்தியா சார்பில் தேசிய அணி ஒன்று அனுப்ப திட்டமிடப்பட்டது.
அந்த அணிக்கு வீரர்களை தேர்வு செய்ய ஒரு தேசிய போட்டி நடத்தப்பட்டது. அப்போது உத்தரப்பிரதேச அணி சார்பில் தயான்சந்த் களமிறங்கினார். அந்தத் தொடரில் தன்னுடைய ஹாக்கி திறமை முழுவதையும் காட்டி அனைவரையும் வியக்க வைத்தார். இதனால் 1928ஆம் ஆண்டு ஒலிம்பிக் செல்லும் இந்திய ஹாக்கி அணியில் இவர் இடம்பிடித்தார்.
ஒலிம்பிக்கில் தயான்சந்த்:
இந்திய அணியில் அவர் இடம்பிடித்தப் பிறகு நடந்தது எல்லாம் பெரிய சரித்தரம் தான். முதல் ஒலிம்பிக் தொடரிலேயே 5 போட்டிகளில் 14 கோல் அடித்து அசத்தினார். அத்துடன் இந்திய முதல் தங்கம் வெல்ல முக்கிய காரணமாகவும் அமைந்தார். அதன்பின்னர் 1932ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி இரண்டாவது தங்கம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். அந்த முறை தயான்சந்த் உடன் ஹாக்கி அணியில் அவருடைய சகோதரர் ரூப் சிங்கும் இருந்தார்.
அதன்பின்னர் நடைபெற்ற 1936ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி கேப்டனாக தயான்சந்த் நியமிக்கப்பட்டார். அந்த முறை ஹாக்கியில் தங்கம் வென்றால் அது ஹாட்ரிக் தங்கமாக அமையும் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்தது.
1936ஆம் ஆண்டு பெர்லின் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் இறுதிப் போட்டியை சர்வாதிகாரி ஹிட்லர் நேரில் பார்த்தார். அந்தப் போட்டியில் இந்தியா-ஜெர்மனி அணிகள் மோதின. இந்திய அணி 8 கோல்கள் அடித்தது.அதில் தயான்சந்த் மட்டும் 6 கோல்கள் அடித்தார். அப்போது தயான்சந்த் ஆட்டத்தை பார்த்து வியந்த ஹிட்லர் தயான்சந்தை பாராட்டி ஜெர்மனி இராணுவத்தில் சேர அழைத்தார். இதற்கு தயான் சந்த் ‘இந்தியா விற்பனைக்கு அல்ல’ என்ற பதிலை அளித்தார்.
அதற்கு ஹிட்லர், ‘உங்களுடைய நாட்டுப் பற்றுக்கு மொத்த ஜெர்மனியும் தலைவணங்குகிறது’ என்று தெரிவித்தார். அத்துடன் ஹிட்லர் தயான்சந்தை பார்த்து சல்யூட் அடித்தார். மேலும் தயான் சந்திற்கு ஹாக்கியின் மந்திரவாதி (Wizard of Hockey) என்ற பட்டத்தையும் ஹிட்லர் அளித்தார்.
தேசிய விளையாட்டு தினம்:
பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று திரும்பிய பிறகு தயான்சந்த் இந்திய ஹாக்கி அணியிலிருந்து விலகி இருந்தார். ராணுவ அணியில் மட்டும் அவ்வப்போது போட்டிகளில் பங்கேற்று வந்தார். 1956ஆம் ஆண்டு அவர் ராணுவத்திலிருந்து மேஜர் பதவியுடன் ஓய்வு பெற்றார். அதன்பின்னர் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அதன்பின்னர் சில நாட்கள் ஹாக்கி பயிற்சியாளராகவும் இருந்தார். 1979ஆம் ஆண்டு தன்னுடைய 74ஆவது வயதில் இவர் இயற்கை எய்தினார். அவருடைய நினைவாக ஒரு தபால் தலை வெளியிட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் தபால் தலை வெளியிடப்பட்டுள்ள ஒரே ஹாக்கி வீரர் மேஜர் தயான்சந்த் தான்.
ஹாக்கி விளையாட்டில் அதற்கு பின்னர் பல்பீர்சிங் சீனியர், சாஃபர் இக்பால் போன்ற பல வீரர்கள் வந்தாலும் யாரும் தயான்சந்தின் மாயஜால ஆட்டத்தை செய்து காட்ட முடியவில்லை. இதன்காரணமாகவே அவர் ஹாக்கி உலகின் தாதா அதாவது அனைவருக்கும் அண்ணன் முன்னோடியாக இருக்கிறார். அவருடைய பிறந்தநாளை இந்திய அரசு தேசிய விளையாட்டு தினமாக அறிவித்து அவரை கௌரவித்தது. தற்போது விளையாட்டு துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை தயான்சந்த் பெயரில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ராஜீவ் காந்தி பெயர் நீக்கம்... இனி தயான்சந்த் கேல் ரத்னா விருது! மோடி அறிவிப்பு!